உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி உள்ளது. 

அந்த நம்பிக்கைக்கு ஏற்ப இந்திய அணியும் சிறப்பாக ஆடி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் மிகப்பெரிய பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் தான். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சதமடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவான் சதமடித்தார். இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஒருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடினால் கண்டிப்பாக இந்திய அணியின் வெற்றி உறுதி.

இந்நிலையில், ஐசிசி தொடர்களில் அபாரமாக ஆடக்கூடியவரான தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்ததால் அடுத்த சில போட்டிகளில் ஆடமாட்டார். தவான் ஆடாதது இந்திய அணிக்கு பேரிழப்பு. அதனால் ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். தவான் விரைவில் குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவான் முழு உடற்தகுதியை பெறாத பட்சத்தில் அவருக்கு பதிலாக அணியில் இணைவதற்காக ரிஷப் பண்ட் இங்கிலாந்து சென்றுள்ளார். 

ஆனால் ரிஷப் பண்ட் அணியில் இணைவதற்கான தேவை இருக்காது என்றே தெரிகிறது. ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவில், தவான் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி நிர்வாகத்திற்கு உடற்தகுதி நிபுணர் குழு ஒரு நற்செய்தியை சொல்லியுள்ளதாக தெரிகிறது. அதாவது தவான் விரைவில் குணமடைந்துவிடுவார் என்பதால் உலக கோப்பை தொடரின் இரண்டாவது பாதியில் தவான் ஆடுவதில் சிக்கல் இருக்காது என்பதுதான் அந்த நற்செய்தி. 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக இந்திய அணி, நியூசிலாந்து(இன்றைய போட்டி), பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகளுடன் மோதுகிறது. இந்த நான்கு போட்டிகளிலும் தவான் ஆடமாட்டார் என்பது உறுதி. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தவான் ஆட வாய்ப்புள்ளதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ தெரிவித்துள்ளது. 

இதன்மூலம் தவான் உலக கோப்பை தொடர் முழுவதுமாக விலகமாட்டார் என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.