ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ரோஹித் - தவான் அமைத்து கொடுத்த சிறப்பான அடித்தளத்தால் இமாலய ஸ்கோரை நோக்கி இந்திய அணி ஆடிக்கொண்டிருக்கிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி நான்கு அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியது. ராயுடுவுக்கு பதில் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து சொதப்பிவந்த தவான், இந்த போட்டியில் கண்டிப்பாக சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார். ரோஹித் - தவான் இருவருமே தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினர். தவான் தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய பவுலர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினார். ரோஹித் சர்மா வழக்கம்போல தொடக்கத்தில் நிதானமாக ஆடினாலும் களத்தில் நிலைத்த பின்னர் அடித்து ஆடினார்.

இருவரும் இணைந்து சிறப்பாக ஆட, முதல் விக்கெட்டை வீழ்த்தவே திணறினர். 92 பந்துகளில் 95 ரன்களை குவித்த ரோஹித் சர்மா 5 ரன்களில் சதத்தை தவறவிட்டார். ஆனால் தவான் அவசரப்படவில்லை. சதத்தை பூர்த்தி செய்தார். 

ரோஹித் ஆட்டமிழந்ததும் ராகுல் களத்திற்கு வந்தார். தவானுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ராகுல் நிதானமாக ஆடிவருகிறார். 32வது ஓவரிலேயே இந்திய அணி 200 ரன்களை எட்டிவிட்டது. ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருப்பதால் டெத் ஓவர்களில் இந்திய வீரர்கள் அடித்து ஆடுவர். ராகுல், கோலி, ரிஷப் பண்ட் என பேட்டிங் ஆர்டர் வலுவாக இருப்பதால் இமாலய ஸ்கோரை எட்டுவது உறுதி.