உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், சில வீரர்கள் ஃபார்மில் இல்லாமல் தவித்துவருவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. 

உலக கோப்பை நெருங்கிவிட்டதால் உலக கோப்பைக்கான அணி தேர்வுதான் பிரதான விவாதக்களமாக உள்ளது. உலக கோப்பைக்கான அணியில் 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டார்கள். இந்நிலையில், அந்த வீரர்களில் சிலரே ஃபார்மில் இல்லாமல் இருப்பது வருத்தமான விஷயம்தான். 

ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே என பல வீரர்களை களமிறக்கிவிட்டு யாருமே சரியா வராததால் நீண்ட தேடுதல் படலத்திற்கு பேட்டிங்கில் நான்காம் வரிசைக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர் ராயுடு. ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடினார் ராயுடு. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் முதல் 4 விக்கெட்டுகளை இந்திய அணி விரைவில் இழந்துவிட்ட நிலையில், களத்தில் நிலைத்து ஆடி 90 ரன்களை குவித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து நம்பிக்கையளித்தார். 

ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் சொதப்பிவிட்டார். 2 மற்றும் 3வது போட்டிகளில் விரைவிலேயே களத்திற்கு வந்தார் ராயுடு. அவருக்கு பெரிய இன்னிங்ஸ் ஆடி தனது திறமையை நிரூபித்து உலக கோப்பை அணியில் இடத்தை உறுதி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இரண்டு அரிய வாய்ப்புகளையும் தவறவிட்டார் ராயுடு. ராயுடு தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை. அவரது தன்னம்பிக்கையற்ற மனநிலையும் மோசமான் ஃபார்மும் மீண்டும் நான்காம் இடம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல தொடக்க வீரரான தவானும் மோசமான ஃபார்மில் இருக்கிறார். அவரது நம்பிக்கையை மீண்டும் பெற ஒரே ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும். ஆனால் அந்த ஒரு இன்னிங்ஸை சரியாக ஆடமுடியாமல் தவித்துவருகிறார் தவான். இந்திய அணியின் முதல் 3 வீரர்கள்தான் அணிக்கு வலு சேர்த்துவந்தனர். இந்நிலையில் தவான் சரியாக ஆடாமல் தொடர்ந்து சொதப்பிவருவது அணியை வலுவிழக்க செய்கிறது. 

நேற்றைய போட்டியிலும் தவானும் ராயுடுவும் பந்தை எதிர்கொண்டு ஆட திணறி அவுட்டாகினர். இதையடுத்து தவான் மற்றும் ராயுடுவின் மோசமான ஃபார்ம் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.