சையத் முஷ்டாக் அலி தொடர் நடந்துவருகிறது. இதில் கர்நாடகா மற்றும் ஆந்திரா அணிகளுக்கு இடையேயான போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆந்திரா அணி 20 ஓவரில் 184 ரன்களை குவித்தது. தேவ்தத் படிகல்லின் அதிரடி சதத்தால் 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி கர்நாடகா அணி அபார வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் ஆடிய ஆந்திரா அணியின் தொடக்க வீரர் அஷ்வின் ஹெப்பார் மற்றும் பிரஷாந்த் குமார் ஆகிய இருவரும் பொறுப்புடனும் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடி அரைசதம் அடித்தனர். ஹெப்பார் 44 பந்துகளில் 61 ரன்களையும் பிரஷாந்த் குமார் 51 பந்துகளில் 79 ரன்களையும் குவித்தனர். இவர்களை தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. ஹெப்பார் மற்றும் பிரஷாந்த்தின் அதிரடியால் ஆந்திரா அணி 20 ஓவரில் 184 ரன்களை குவித்தது. 

185 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கர்நாடக அணியில் தேவ்தத் படிக்கல்லை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தனி ஒருவனாக அதிரடியாக ஆடி சதமடித்து கர்நாடக அணியை வெற்றி பெற செய்தார்  படிக்கல். தொடக்க வீரர்கள் இருவருமே தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடிய கிருஷ்ணப்பா கௌதம் 17 பந்தில் 35 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 

நான்காம் வரிசையில் பேட்டிங் ஆடவந்த படிக்கல், அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஆந்திர அணியை மிரட்டினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் செம அடி அடித்த தேவ்தத் படிக்கல், சதம் விளாசினார். 60 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கலுடன் 122 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 19வது ஓவரிலேயே கர்நாடக அணி இலக்கை எட்டி வெற்றி பெற உதவினார். 

டி20(சர்வதேச போட்டிகள், ஐபிஎல், சையத் முஷ்டாக் அலி சேர்த்து) கிரிக்கெட்டில் இலக்கை விரட்டும்போது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் தேவ்தத் படிக்கல். 

19 வயதான தேவ்தத் படிக்கல், அண்மையில் நடந்த விஜய் ஹசாரேவிலும் சிறப்பாக ஆடியிருந்தார்.