Asianet News TamilAsianet News Tamil

#SLvsIND அறிமுக போட்டியிலேயே வரலாற்று சாதனை படைத்த தேவ்தத் படிக்கல்..!

இலங்கைக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே இந்திய அணியின் இளம் வீரர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
 

devdutt padikkal historic record as a debutant player in international cricket as an indian cricketer
Author
Colombo, First Published Jul 29, 2021, 2:21 PM IST

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த 27ம் தேதி நடப்பதாக இருந்த 2வது டி20 போட்டி, க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா உறுதியானதால் நேற்று(28ம் தேதி) நடந்தது.

க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்தவகையில், 2வது போட்டியில் பிரித்வி ஷா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் ஆடவில்லை.

அதனால் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா, சேத்தன் சக்காரியா ஆகிய வீரர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றனர். இந்திய அணி இருக்கிற வீரர்களை வைத்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன், இருக்கிற வீரர்களுடன் களமிறங்கியது.

இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ராகுல் சாஹர், சேத்தன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 132 ரன்கள் மட்டுமே அடித்தது. 133 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இலங்கை அணியை அந்த இலக்கை எளிதாக அடிக்கவிடாமல் இந்திய அணி கடுமையாக போராடியது. ஆனால் இலக்கு எளிதானது என்பதால் கடைசி ஓவரில் இலக்கை எட்டி இலங்கை வெற்றி பெற்றது.

இந்த இலங்கை தொடரில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், நிதிஷ் ராணா, சேத்தன் சக்காரியா, பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட பல வீரர்கள்  இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகினர்.

அந்தவகையில், 2வது டி20 போட்டியில் அறிமுகமான கர்நாடகாவை சேர்ந்த தேவ்தத் படிக்கல், வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 21ம் நூற்றாண்டில்(2000ம் ஆண்டுக்கு பிறகு) பிறந்த, இந்திய அணியில் அறிமுகமான முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை தேவ்தத் படிக்கல் படைத்துள்ளார். தேவ்தத் படிக்கல் 2000ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி பிறந்தவர்.

அறிமுக போட்டியில் தேவ்தத் படிக்கல் 23 பந்தில் 29 ரன்கள் அடித்தார். ஐபிஎல் 2019 சீசனில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தேவ்தத் படிக்கல், 2020 சீசனிலும் நன்றாக ஆடினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios