இந்தியாவின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கடந்த 24ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், டெல்லி ஃபேரோஷ் ஷா கோட்லா ஸ்டேடியத்திற்கு அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

மத்திய நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர் பதவிகளை வகித்தவர் அருண் ஜேட்லி. டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நீண்டகாலம் இருந்தார் அருண் ஜேட்லி.

சேவாக், விராட் கோலி, கவுதம் காம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் ரிஷப் பண்ட் வரை நிறைய வீரர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைக்க காரணமாக இருந்தவர். அதுமட்டுமல்லாமல் அருண் ஜேட்லி, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோதுதான், ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

டெல்லி கிரிக்கெட் மைதானத்தை விரிவாக்கம் செய்த விவகாரத்தில் தான் அருண் ஜேட்லி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டெல்லி கிரிக்கெட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் அருண் ஜேட்லி. எனவே டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தின் பெயர் மாற்றப்பட்டு அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்படுவதாக டெல்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

செப்டம்பர் 12ம் தேதி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த விழாவில் டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்படவுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு ஸ்டாண்டிற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயர் சூட்டப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.