ஐபிஎல் 15வது சீசனின் அதிவேக பந்தை வீசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக்கின் பந்தை ரோவ்மன் பவல் பவுண்டரிக்கு விளாச, உம்ரான் மாலிக்கை கிண்டலடித்துள்ளது டெல்லி அணி.
ஐபிஎல் 15வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கானதாக அமைந்துள்ளது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, ஆயுஷ் பதோனி, திலக் வர்மா உள்ளிட்ட வீரர்களும், உம்ரான் மாலிக், யஷ் தயால் உள்ளிட்ட இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் பவுலிங்கிலும் அசத்துகின்றனர்.
இந்தியாவை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலரான உம்ரான் மாலிக் வேகத்தில் மிரட்டுகிறார். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசுகிறார். இந்திய ஃபாஸ்ட் பவுலர் ஒருவர் 150 கிமீ வேகத்தில் தொடர்ச்சியாக வீசுவது என்பது அரிதினும் அரிதான விஷயம். அதை அசால்ட்டாக செய்கிறார் உம்ரான் மாலிக்.
இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள உம்ரான் மாலிக், இந்த சீசனின் அதிவேக பந்தில் தனது ரெக்கார்டை தானே தகர்த்துவருகிறார். தகர்த்துவருகிறார். சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் தோனிக்கு உம்ரான் மாலிக் 154 கிமீ வேகத்தில் ஒரு பந்தை வீசினார். அதுதான் இந்த சீசனின் அதிவேக பந்தாக இருந்தது.
இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் அதைவிட 2 அதிவேக பந்துகளை வீசினார். டெல்லி கேபிடள்ஸ் இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசிய உம்ரான் மாலிக், அந்த ஓவரின் 4வது பந்தை 157 கிமீ வேகத்திலும், மற்றொரு பந்தை 155 கிமீ வேகத்திலும் வீசினார். 157 கிமீ வேகத்தில் உம்ரான் மாலிக் வீசிய பந்துதான் இந்த சீசனில் அதிவேக பந்து. 155 கிமீ வேகத்தில் வீசியது, 2வது வேகமான பந்து.
ஆனால் அந்த இரண்டு பந்தையுமே டெல்லி கேபிடள்ஸ் வீரர் ரோவ்மன் பவல் பவுண்டரி அடித்தார். இதையடுத்து உம்ரான் மாலிக் வீசிய அதிவேக (157 கிமீ) பந்தை பவல் பவுண்டரி அடித்ததை வைத்து உம்ரான் மாலிக்கை கிண்டலடித்துள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி. அதாவது, 157 கிமீ வேகத்தில் வந்த பந்து 200 கிமீ வேகத்தில் திரும்பிச்சென்றது என்று டெல்லி அணி டுவீட் செய்துள்ளது.
