ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத மூன்று அணிகளில் டெல்லி கேபிடள்ஸ் அணியும் ஒன்று. அந்த அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில், கடந்த சீசனில் அபாரமாக ஆடியது. 

பிளே ஆஃபில் சிஎஸ்கேவிடம் தோற்று வெளியேறியது டெல்லி கேபிடள்ஸ். ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் டெல்லி கேபிடள்ஸ் அணியை வலுவாக உருவாக்கியுள்ளார் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் ஆகிய திறமையான இளம் வீரர்களை கொண்ட அணியாக டெல்லி திகழ்கிறது. 

13வது சீசனுக்கான ஏலத்தில், அஷ்வின், ரஹானே, மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, ஷிம்ரான் ஹெட்மயர், ஆகியோரையும் எடுத்துள்ளதால், அணி கூடுதல் பலத்துடன் திகழ்கிறது. 

டெல்லி கேபிடள்ஸின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து பார்ப்போம். தொடக்க வீரர் பிரித்வி ஷா என்பது உறுதி. அவருடன் இறங்கும் மற்றொரு தொடக்க வீரருக்கான போட்டியில் ரஹானே, தவான், ஜேசன் ராய் ஆகிய மூவரும் உள்ளனர். கடந்த சீசனிலேயே தவான் அதிரடியாக ஆடாமல் பந்துக்கு நிகரான ரன் அடித்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. எனவே பிரித்வியுரன் ரஹானே இறங்குவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனாலும் யார் என்பதை உறுதியாக கூற முடியாது. 

மிடில் ஆர்டர் மற்றும் பவுலிங் யூனிட்டில் வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்த அணி நிர்வாகம் நினைத்தால் ஜேசன் ராய்க்கு வாய்ப்பு கிடைக்காது. ஏனெனில் அவரும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். ஏற்கனவே ரஹானே மற்றும் தவான் ஆகியோர் டாப் ஆர்டர்கள் என்பதால் அவர்களுக்குள்ளேயே போட்டி நிலவும் சூழல் உள்ளது. எனவே ராய்க்கான வாய்ப்பு அரிது. ஆனால் ரஹானேவும் தவானும் சொதப்பினால் அதன்பின்னர் ராய் இறக்கப்பட வாய்ப்புள்ளது. 

மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோர் இறங்குவர். வெளிநாட்டு வீரர்களாக ஹெட்மயர், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரபாடா ஆகிய நால்வரும் பெரும்பாலான போட்டிகளில் ஆடக்கூடும். தேவையை பொறுத்து இவர்களில் ஒருவர் நீக்கப்பட்டு ஸ்பின்னர் லாமிசன்னே சேர்க்கப்படலாம். ஸ்பின்னர்களாக அஷ்வின், அக்‌ஷர் படேல் ஆகிய இருவரும் ஆடுவார்கள். 

Also Read - ஐபிஎல் 2020: பயிற்சியில் பந்துகளை பறக்கவிடும் தல.. வீடியோ

டெல்லி கேபிடள்ஸ் உத்தேச ஆடும் லெவன்:

பிரித்வி ஷா, ரஹானே/தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹெட்மயர், அலெக்ஸ் கேரி/லாமிசன்னே, மார்கஸ் ஸ்டோய்னிஸ்/கிறிஸ் வோக்ஸ், அஷ்வின், அக்ஸர் படேல், இஷாந்த் சர்மா, ரபாடா.