உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் நாளை(ஜனவரி 10) தொடங்குகிறது. மொத்தம் 38 அணிகள் மோதும் இந்த தொடரில் பரோடா அணியும் ஒன்று. பரோடா அணி க்ருணல் பாண்டியாவின் கேப்டன்சியில் இந்த தொடரை எதிர்கொள்கிறது.

க்ரூப் சியில் உள்ள பரோடா அணி நாளை(10ம் தேதி) நடக்கவுள்ள முதல் போட்டியில் உத்தரகண்ட் அணியை எதிர்கொள்கிறது. போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாளான இன்று(சனிக்கிழமை) திடீரென அணியிலிருந்து விலகினார் தீபக் ஹூடா.

க்ருணல் பாண்டியா தலைமையிலான பரோடா அணியில் இடம்பெற்றிருந்தார் தீபக் ஹூடா. ஹூடா தான் துணை கேப்டனும் கூட. இந்நிலையில், நாளை போட்டி தொடங்கவுள்ள நிலையில், வதோதரா ரிலையன்ஸ் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கேப்டன் க்ருணல் பாண்டியா மற்றும் துணை கேப்டன் தீபக் ஹூடாவிற்கு இடையே கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது.

அந்த வாக்குவாதத்தில் தீபக் ஹூடாவை கடுமையாக க்ருணல் பாண்டியா திட்டியதாகவும், மிரட்டியதாகவும் தெரிகிறது. அதன் விளைவாக மிகுந்த மன உளைச்சலுக்கும் அழுத்தத்திற்கும் ஆளான தீபக் ஹூடா, தான் இந்த தொடரிலிருந்து முழுவதுமாக விலகுவதாக பரோடா கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதிவிட்டு விலகிவிட்டார். இதையடுத்து, முதல் போட்டிக்கான 17 வீரர்களை கொண்ட பரோடா அணியில் தீபக் ஹூடா பெயர் இடம்பெறவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.