ஐபிஎல் 15வது சீசனிலிருந்து முழுவதுமாக தீபக் சாஹர் விலகும் நிலை ஏற்பட்டுள்ளதால், இது சிஎஸ்கே அணிக்கு மரண அடியாக விழுந்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசனுக்கு முன்பாக தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி படுமோசமாக ஆடி, ஆடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் பின் தங்கியுள்ளது.
டாப் ஆர்டர் பேட்டிங், பவர்ப்ளே பவுலிங், ஸ்பின் என அனைத்துமே சிஎஸ்கே அணிக்கு பெரும் பிரச்னையாகவே இருக்கிறது. ஃபாஃப் டுப்ளெசிஸ் இல்லாதது டாப் ஆர்டர் பேட்டிங்கில் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, சிஎஸ்கே அணி ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக தீபக் சாஹரை ஏலத்தில் ரூ.14 கோடிக்கு எடுத்தது. ஆனால் காயம் காரணமாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பயிற்சி பெற்றுவரும் தீபக் சாஹர், ஐபிஎல்லின் முதல் பாதியில் ஆடமாட்டார் என்றாலும் பிற்பாதியில் ஆடுவார் என்று சிஎஸ்கே அணி நம்பியது.
ஆனால் அதற்கும் இப்போது பங்கம் வந்துள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீபக் சாஹருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் தொடர்ந்து அங்கேயே இருந்து முழு ஃபிட்னெஸை அடைய வேண்டியது அவசியம். அதனால், அவர் ஐபிஎல் 15வது சீசன் முழுவதுமே ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்தவல்ல பவுலர்கள் இல்லாமல் படுதோல்வி அடைந்துவரும் சிஎஸ்கே அணிக்கு, தீபக் சாஹர் இல்லாதது மரண அடியாக விழுந்துள்ளது.
