தனது பவுலிங் மேம்பட உதவிகரமாக இருந்த, தான் குருவை போல மதிக்கும் முகமது ஷமியின் காலில் விழுந்து தீபக் சாஹர் ஆசிபெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது. 

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனில் அசத்தும் முனைப்பில் களம் கண்டது.

ஆனால் இந்த சீசனின் முதல் போட்டியில் சொதப்பலான பவுலிங்கால் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே தோற்றது. அந்த தோல்வியால் சுதாரித்துக்கொண்ட சிஎஸ்கே அணி பஞ்சாப்புக்கு எதிராக பவுலிங்கில் அசத்தியது.

குறிப்பாக முதல் போட்டியில் விக்கெட்டும் வீழ்த்தாமல் ரன்களையும் வாரி வழங்கிய தீபக் சாஹர், பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் தனது பெரிய பலமான ஸ்விங்கை பயன்படுத்தி, அபாரமான ஸ்விங் பவுலிங்கின் மூலம், பவர்ப்ளேயிலேயே பஞ்சாப் பேட்டிங் ஆர்டரை சரித்தார். மயன்க் அகர்வாலை அவுட் ஸ்விங்கில் கிளீன் போல்டாக்கிய தீபக் சாஹர், அதன்பின்னர் கெய்ல், பூரன், தீபக் ஹூடா ஆகிய மூவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

4 ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, பஞ்சாப் அணியை 106 ரன்னுக்கு சுருட்ட உதவினார் தீபக் சாஹர்.

தீபக் சாஹரின் அபாரமான பவுலிங்கால் தான் சிஎஸ்கே அணி வெற்றியே பெற்றது. மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக, பயிற்சியின்போது எதிரணியான பஞ்சாப்பில் ஆடும் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமியின் காலில் விழுந்து தீபக் சாஹர் ஆசிபெற்ற புகைப்படம் வைரலாகிவருகிறது.

Scroll to load tweet…

தீபக் சாஹரின் ஆரம்பக்காலத்தில் அவரது ஸ்விங் பவுலிங் மேம்பட பல ஆலோசனைகளை வழங்கி வழிநடத்தி உதவியர் முகமது ஷமி. தீபக் சாஹர் இன்றைக்கு ஒரு முழுமையான ஸ்விங் பவுலராக திகழ்வதற்கு முகமது ஷமியும் ஒரு காரணம். எனவே அந்தவகையில் நன்றி மறவாத தீபக் சாஹர், களத்திலேயே ஷமியின் காலில் விழுந்து ஆசிபெற்றார்.