உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இன்னும் 12 நாட்களே உள்ளது. 1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில்தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இந்த உலக கோப்பை மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் ஒன்றுதான் இந்த உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன.

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இதுவரை உலக கோப்பையை வென்றதே இல்லை. இயன் மோர்கன் தலைமையிலான தற்போதைய இங்கிலாந்து அணி இந்த முறை உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2015 உலக கோப்பையை டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி வெல்லும் என பரவலாக கருத்து இருந்தது. ஆனால் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று கண்ணீருடன் வெளியேறியது.

தற்போதைய தென்னாப்பிரிக்க அணியை டுபிளெசிஸ் வழிநடத்தி செல்கிறார். 2015 உலக கோப்பைக்கு பின்னர் கேப்டன்சியிலிருந்து விலகிய டிவில்லியர்ஸ், டுபிளெசிஸ் தலைமையில் ஆடிவந்தார். அவர் ஒரு கேப்டனாக இல்லாவிட்டாலும் ஒரு வீரராக தென்னாப்பிரிக்க அணியில் ஆடி 2019 உலக கோப்பையை வென்று கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த ஆண்டு திடீரென ஓய்வு அறிவித்தார். 

அவர் இல்லாதது தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவுதான். எனினும் அந்த அணி ரபாடா, ஸ்டெயின், இம்ரான் தாஹிர், லுங்கி இங்கிடி என தலைசிறந்த பவுலர்களை கொண்டுள்ளதால் நம்பிக்கையுடன் இந்த உலக கோப்பையில் களமிறங்க உள்ளது. 

இந்நிலையில், பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிவில்லியர்ஸிடம் 2023 உலக கோப்பையில் ஆட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு ஸ்மார்ட்டாக பதிலளித்தார். 2023ல் எனக்கு 39 வயது. அந்த உலக கோப்பையில் தோனி ஆடினால் கண்டிப்பாக நானும் ஆடுவேன் என்று பதிலளித்தார். 

2023ல் தோனி ஆடுவதற்கு வாய்ப்பேயில்லை என்பது அனைவரும் அறிந்ததே.