இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு மைல்கல்லை எட்டுகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் செய்யப்பட்ட சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து வரும் கோலி, ரன்களை குவித்துவருவதால் ரன் மெஷின் என்று அழைக்கப்படுகிறார். ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய கோலி, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 41வது சதத்தை பூர்த்தி செய்தார். அதற்கு முந்தைய போட்டியிலும் கோலி சதமடித்திருந்தார். 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு(49 சதங்கள்) அடுத்து அதிக சதங்கள் அடித்த வீரராக விராட் கோலி திகழ்கிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய போட்டிகளை எல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின்(100 சதங்கள்), பாண்டிங்கிற்கு(71 சதங்கள்) அடுத்து 66 சதங்களுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் விராட் கோலி.

ஒரு காலத்தில் சதமடிப்பது என்பது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. சதங்கள் அரிதாகத்தான் அடிக்கப்பட்டன. ஆனால் விராட் கோலியோ அசால்ட்டாக போட்டிக்கு போட்டி சதமடித்துவருகிறார். அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 49 அரைசதங்களை அடித்துள்ள கோலி, 41 சதங்களை விளாசியுள்ளார். கிட்டத்தட்ட அரைசதத்திற்கு நிகரான சதங்களை விளாசியுள்ளார் கோலி. 

இலக்கை விரட்டுவதில் கோலி வல்லவர். எவ்வளவு கடினமான இலக்காக இருந்தாலும் கோலி களத்தில் நிலைத்துவிட்டால் பெரும்பாலும் இந்திய அணியின் வெற்றி உறுதி. இலக்கை விரட்டும்போதுதான் அதிகமான சதங்களை அடித்துள்ளார் கோலி. 

சமகால கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் அனைத்து காலத்திலும் சிறந்த வீரர்களில் ஒருவராக கோலி திகழ்கிறார். கோலி தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வதற்கான காரணத்தை தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடிய டிவில்லியர்ஸ், கோலியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். கோலியை அருகிலிருந்து நீண்டகாலமாக பார்த்துவருபவர்.  அந்த வகையில் ஒரு பேட்ஸ்மேனாக கோலியின் வெற்றி ரகசியத்தை டிவில்லியர்ஸ் பகிர்ந்துள்ளார். 

கோலி குறித்து பேசிய டிவில்லியர்ஸ், விராட் கோலியின் பேட்டிங் வியப்பளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக ஆடிவருகிறார். ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் கோலியுடன் 8 ஆண்டுகளாக ஆடிவருகிறேன். அவரது ஆளுமையும் மனவலிமையும்தான் அவர் தலைசிறந்து விளங்குவதற்கு காரணம் என்று தெரிவித்தார்.