ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டிலிருந்து நடந்துவருகிறது. 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து 12வது சீசன் தற்போது நடந்துவருகிறது. 12வது சீசனும் வெற்றிகரமாக முடிய உள்ளது. 

ஐபிஎல்லை போலவே பிக்பேஷ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக், மஸான்சி சூப்பர் லீக்(தென்னாப்பிரிக்கா), ஆஃப்கானிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் என உலகம் முழுவதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இவற்றில் பணம் தாறுமாறாக புழங்கும் தொடர் என்றால் அது ஐபிஎல் தான். சீசனுக்கு சீசன் புதுப்பொலிவு பெறும் ஐபிஎல் வியாபாரம் மிகப்பெரிய அளவில் நடந்துகொண்டிருக்கிறது. மற்ற தொடர்களில் ஆட்டநாயகன் விருதுடன் சேர்த்து அதிகபட்சம் கூடுதலாக ஒரு விருது வழங்கப்படலாம். ஆனால் ஐபிஎல்லில் சூப்பர் ஸ்டிரைக்கர், கேம் சேஞ்சர், சிறந்த கேட்ச், ஸ்டைலிஷ் வீரர், ஆட்டநாயகன் என ஐந்து விருதுகள் வழங்கப்படுகின்றன. வீரர்கள் பண மழையில் நனைகின்றனர். அதனாலேயே அனைத்து நாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆட விரும்புகின்றனர். 

உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிவரும் தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் ஐபிஎல் குறித்து பேசியுள்ளார். நான் பேச்சுக்காக சொல்லவில்லை; உண்மையாகவே சொல்கிறேன், ஐபிஎல்லுக்கு பக்கத்தில் கூட மற்ற எந்த தொடராலும் வரமுடியாது. நானும் பல நாட்டு லீக் தொடர்களில் ஆடியுள்ளேன். ஐபிஎல் தான் சிறந்தது. உலக கோப்பையை விட கிராண்டாக நடத்தப்படுகிறது. நான் தற்போது இந்தியாவில் இருக்கிறேன்; ஐபிஎல்லில் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்பதற்காக இதை சொல்லவில்லை. உண்மையாகவே ஐபிஎல் மிகவும் பெரிய தொடர் என்றும் உலக கோப்பையை விட சிறந்த தொடர் என்றும் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த உலக கோப்பையில் ஆடாமல் கடந்த ஆண்டே ஓய்வுபெற்றுவிட்டார் டிவில்லியர்ஸ். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, உலகம் முழுதும் நடக்கும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார்.