கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் 13வது சீசன், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத மத்தியிலிருந்து கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்காத நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது.

4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியிருப்பது, நல்ல சமிக்ஞையாக அமைந்துள்ளது. மற்ற அணிகளின் வீரர்களும் டிரெய்னிங்கை தொடங்கிவிட்டனர். மீண்டும் களம் காண அனைத்து வீரர்களும் தயாராகிவருகின்றனர். 

இந்நிலையில், உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட மிஸ்டர் 360 என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ், டிரெய்னிங்கில் அதிரடியாக ஆடி மிரட்டியுள்ளார். 2018ம் ஆண்டு மத்தியில் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற டிவில்லியர்ஸ், நடக்கவுள்ள டி20 உலக கோப்பையில் மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் 24 வீரர்கள், தலா 8 வீரர்களை கொண்ட 3 அணிகளாக பிரிந்து ஆடினர். ஈகிள்ஸ், கிங்ஃபிஷர்ஸ், கைட்ஸ் என மூன்று அணிகளாக பிரிந்து ஒரு அணிக்கு 12 ஓவர்கள் என்ற வீதம் ஆடியதில், அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ், 21 பந்தில் அரைசதம் விளாசி அசத்தினார். 24 பந்தில் 61 ரன்களை குவித்து, 12 ஓவரில் அவரது அணி 161 ரன்களை அடிக்க உதவினார். 

கிரிக்கெட் வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக களம் கண்டு ஆடிவருவது, கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உற்சாகமளித்துள்ளது.