தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு ரிஷப் பண்ட்டின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என்று பாகிஸ்தான் முன்னால் வீரர் டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 211 ரன்களை குவித்தும், அதை கட்டுப்படுத்த முடியாமல் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அதிகபட்சமாக அவர் 48 பந்தில் 76 ரன்களை குவித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 27 பந்தில் 36 ரன்கள் அடித்தார். டெத் ஓவரில் அடித்து ஆடிய ஹர்திக் பாண்டியா 12 பந்தில் 31 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுத்தார். இதையடுத்து 20 ஓவரில் 211 ரன்கள் அடித்தது இந்திய அணி.

212 ரன்கள் என்பது கடினமான இலக்குதான் என்றாலும், டேவிட் மில்லர்(64) மற்றும் வாண்டர் டசன்(75) ஆகிய இருவரின் அதிரடி அரைசதங்களால் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.

இந்த போட்டியில் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி மிக சுமாராகவே இருந்தது. இந்திய அணியின் முன்னணி மற்றும் நட்சத்திர ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹலுக்கு வெறும் 2ஓவர்கள் மட்டுமே பவுலிங் கொடுத்திருந்தார் ரிஷப்பண்ட். சாஹலின் பவுலிங்கை அவர்கள் அடித்து ஆடியதால் மேலும் ஒரு ஓவர் வழங்க தயங்கினார் ரிஷப் பண்ட். ஆனால் சாஹல் மாதிரியான பவுலர்கள் ஆட்டத்தை திருப்பவல்லவர்கள். டேவிட் மில்லரும் வாண்டர் டசனும் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடிக்கொண்டிருந்தபோது அந்த ஜோடியை பிரிக்க சாஹலை பயன்படுத்தியிருக்க வேண்டும் ஆனால் அதை செய்ய தவறிவிட்டார் ரிஷப் பண்ட். 

அதேபோல பவுலிங் சுழற்சி, வீரர்களை பயன்படுத்திய விதம் ஆகியவற்றில் கோட்டைவிட்டார் ரிஷப் பண்ட். முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு ரிஷப் பண்ட்டின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என்று டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள டேனிஷ் கனேரியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோற்றது. கேஎல் ராகுல் காயத்தால் விலகியதால் ரிஷப் பண்ட் கேப்டன்சி செய்தார். ரிஷப் பண்ட் கேப்டன்சியில் சொதப்பினார். பவுலர்களை பயன்படுத்திய விதம் மோசமாக இருந்தது. யுஸ்வேந்திர சாஹலை பவர்ப்ளேயில் கொண்டு வந்திருக்கக்கூடாது. மாறாக அக்ஸர் படேலை பயன்படுத்தியிருக்கலாம். ஃபாஸ்ட் பவுலர்களையும் ரிஷப் பண்ட் முறையாக பயன்படுத்தவில்லை. ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு ஓவர் மட்டுமே கொடுத்தது மிகப்பெரிய தவறு என்று டேனிஷ் கனேரியா ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியை விமர்சித்தார்.