விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடாதீங்க.. கேப்டன்சியில் பாபர் பெரிய ஜீரோ.. கேப்டனுக்கு தகுதியே இல்லாத வீரர்
சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகி பாகிஸ்தான் அணி வரலாற்று படுதோல்வி அடைந்த நிலையில், பாபர் அசாமை விராட் கோலியோடு ஒப்பிடக்கூடாது என்றும், பாபர் அசாம் கேப்டன்சியில் பெரிய பூஜ்ஜியம் என்று டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார்.
விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய நால்வரும் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படும் நிலையில், கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் அவர்களுடன் இணைந்தார் பாபர் அசாம்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும், சாதனைகளையும் குவித்து விராட் கோலியின் பேட்டிங் சாதனைகளை தகர்த்துவருகிறார். எனவே சமகாலத்தின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாமும் சேர்ந்துவிட்டார். விராட் கோலியுடன் பாபர் அசாம் ஒப்பிடப்படுகிறார். விராட் கோலியுடன் ஒப்பிடுவதை கடந்து ஒருசிலர் விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்று கருத்து கூறுகின்றனர்.
ஆனால் பாபர் அசாம் இதேபோன்று இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக சிறப்பாக ஆடினால் மட்டுமே அவரை விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டுமே தவிர, இப்போதே ஒப்பிடக்கூடாது என்றும், பாபர் அசாம் விராட் கோலி லெவலை எட்டவில்லை என்றும் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து கூறுகின்றனர். அதேவேளையில், பாபர் அசாமின் கேப்டன்சியை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் சிலரே கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் 3-0 என டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகி வரலாற்று படுதோல்வியை அடைந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் பாகிஸ்தானின் முதல் ஒயிட்வாஷ் இதுதான். சொந்த மண்ணிலேயே தனது கேப்டன்சியில் ஒயிட்வாஷ் ஆகவிட்டுள்ளார் பாபர் அசாம்.
இந்நிலையில், பாபர் அசாம் குறித்து பேசிய டேனிஷ் கனேரியா, விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவதை நிறுத்தவேண்டும். விராட் கோலி, ரோஹித் சர்மாவெல்லாம் மிகப்பெரிய வீரர்கள். அவர்களுடன் ஒப்பிடுமளவிற்கு தகுதியான வீரர்கள் பாகிஸ்தான் அணியிலேயே கிடையாது. பாகிஸ்தானை பொறுத்தமட்டில், பேசச்சொன்னால் அவர்கள் தான் கிங். ஆனால் ஆட்டத்தில் ஜீரோ.
பாபர் அசாம் ஒரு கேப்டனாக மிகப்பெரிய பூஜ்ஜியம். அவர் கேப்டனுக்கு தகுதியில்லாத வீரர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியை வழிநடத்துவதற்கு தகுதியான வீரர் பாபர் அசாம் கிடையாது. பென் ஸ்டோக்ஸ், பிரண்டென் மெக்கல்லமிடருந்து பாபர் அசாம் கேப்டன்சியை கற்றுக்கொள்ள இந்த டெஸ்ட் தொடர் ஒரு அருமையான வாய்ப்பு. பாபர் அசாம் அவரது ஈகோவை ஒதுக்கிவைத்துவிட்டு, எப்படி கேப்டன்சி செய்ய வேண்டும் என்று சர்ஃபராஸ் அகமதுவிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.