சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை அடித்ததும் சச்சின் தான்.

2010ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக குவாலியரில் நடந்த ஒருநாள் போட்டியில் தான் சச்சின் டெண்டுல்கர் அந்த சாதனையை படைத்தார். அதன்பின்னர் தான் சேவாக், ரோஹித் சர்மா(3), கெய்ல், மார்டின் கப்டில், ஃபகார் ஜமான் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதங்களை அடித்தனர். 

அந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கழித்து, இப்போது ஒரு பெரும் பொய்யை கூறியுள்ளார் டேல் ஸ்டெய்ன். சச்சின் டெண்டுல்கரின் அந்த இரட்டை சதம் குறித்து பேசிய டேல் ஸ்டெய்ன், டெண்டுல்கர் எங்களுக்கு(தென்னாப்பிரிக்கா) எதிராக 2010ல் குவாலியரில் நடந்த ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த போட்டியில் டெண்டுல்கர், 190களை கடந்து களத்தில் இருந்தபோது, எனது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

நான் அம்பயரிடம் அப்பீல் செய்தேன். ஆனால் அம்பயர் இயன் குட் அவுட் கொடுக்கவில்லை. எனக்கு பெரிய வியப்பாக இருந்தது. நான் அம்பயரிடம் சென்று, ஏன் அவுட் கொடுக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர், சுற்றி ரசிகர்கள் கூட்டத்தை பார்த்தீர்களா? நான் மட்டும் அவுட் கொடுத்தேன் என்றால் பாதுகாப்பாக ஹோட்டலுக்கு செல்ல முடியாது என்று அம்பயர் என்னிடம் கூறினார் என்று ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் சொன்ன தகவல் அப்பட்டமான பொய். அந்த குறிப்பிட்ட போட்டியில், ஸ்டெய்னின் 31 பந்துகளை சச்சின் டெண்டுல்கர் எதிர்கொண்டார். சச்சின் 190ஐ கடந்தபிறகு, ஸ்டெய்னின் 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். அந்த மூன்று பந்துகளையுமே சச்சின் பேட்டில் தான் ஆடினார். ஸ்டெய்ன் சொன்ன மாதிரி எல்பிடபிள்யூவிற்கான வாய்ப்பே சச்சின் கொடுக்கவில்லை. சச்சின் 190ஐ கடந்தபின், ஸ்டெய்ன் வீசிய ஒரு பந்து கூட சச்சினின் கால்காப்பில் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அப்படியிருக்கையில், ஸ்டெய்ன் கூறியது அப்பட்டமான பொய். இப்போதெல்லாம் பிரபலத்திற்காக நடக்காத விஷயங்களை கூட நடந்ததாக கூறுவது ஃபேஷனாகிவிட்டது.