இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி, 213 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. 

இங்கிலாந்து - அயர்லாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி, 50 ஓவரில் 212 ரன்கள் அடித்துள்ளது. 

இந்த தொடரின் முதல் போட்டியில் அறிமுகமான அயர்லாந்து வீரர் காம்ஃபெர், அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்தார். கடந்த அரைசதம் அடித்து அணியின் மானத்தை காப்பாற்றிய காம்ஃபெர் தான் இந்த போட்டியிலும் அரைசதம் அடித்து அணியை கரைசேர்த்தார். 

பால் ஸ்டெர்லிங், கெவின் ஓ பிரயன் ஆகிய அணியின் சீனியர் வீரர்கள் யாருமே சோபிக்கவில்லை. மற்ற வீரர்களும் சொற்ப ரன்களே அடித்தனர். கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் அயர்லாந்து வீரர்கள் ஆரம்பத்தில் மளமளவெனவும், அடுத்து சீரான இடைவெளியிலும் விக்கெட்டுகளை இழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், காம்ஃபெர் மட்டும் நிலைத்து ஆடி இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். 87 பந்தில் 68 ரன்கள் அடித்து 49வது ஓவரில் தான் ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்களான சிமி சிங் மற்றும் மெக்பிரைன் ஆகிய இருவரும் காம்ஃபெருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி முறையே, 25 மற்றும் 24 ரன்கள் அடித்தனர். எனவே 212 ரன்களை அடித்த அயர்லாந்து அணி, இங்கிலாந்துக்கு 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

இங்கிலாந்து அணிக்கு இது எளிய இலக்குதான் என்றாலும், அதிகமும் இல்லாத குறைவும் இல்லாத ரெண்டுங்கெட்டான் இலக்கு இது. எனவே மிகச்சிறப்பாக அயர்லாந்து பவுலிங் செய்யும் பட்சத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.