ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித்தின் அபாரமான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. ஆஸ்திரேலிய அணியின் 284 ரன்களில் 144 ரன்கள் ஸ்மித் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் அடித்திருந்தது. 

ராய், ரூட், ஜோ டென்லி மற்றும் பட்லர் ஆகிய நால்வரும் ஆட்டமிழந்திருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், சதமடித்த பர்ன்ஸ் 125 ரன்களுடனும் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் 12 ரன்கள் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்த ஸ்டோக்ஸ், அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். 

வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பர்ன்ஸ் - ஸ்டோக்ஸ் ஜோடியை கம்மின்ஸ் பிரித்து பிரேக் கொடுத்தார். ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தாலும் பர்ன்ஸ் தொடர்ந்து நிதானமாக ஆடிக்கொண்டிருக்கிறார். பர்ன்ஸுடன் பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.