ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலம் முடிந்துவிட்ட நிலையில், சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் முடிந்துவிட்டது. சிஎஸ்கே அணி மொத்தமாக ரூ.87.05 கோடி கொடுத்து 25 வீரர்களை வாங்கியுள்ளது. தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகிய 4 வீரர்களும் ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்ட நிலையில், ஏலத்தில் 21 வீரர்களை எடுத்தது. 

ஏலத்தில் பிராவோ, அம்பாதி ராயுடு, தீபக் சாஹர், ராபின் உத்தப்பா ஆகிய பழைய வீரர்களை மீண்டும் எடுத்த சிஎஸ்கே அணி, டெவான் கான்வே, ஆடம் மில்னே, ட்வைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சாண்ட்னெர், கிறிஸ் ஜோர்டான், மஹீஷ் தீக்‌ஷனா ஆகிய வெளிநாட்டு வீரர்களை எடுத்தது.

மேலும் உள்நாட்டு வீரர்களான திவம் துபே, கேஎம் ஆசிஃப், ஆகிய வீரர்களையும், அண்டர் 19 மற்றும் இளம் வீரர்கள் சிலரையும் ஏலத்தில் எடுத்தது. 

இந்நிலையில், ஐபிஎல் 15வது சீசனில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ருதுராஜ் கெய்க்வாட்டுடன் நியூசிலாந்து அதிரடி வீரர் டெவான் கான்வே தொடக்க வீரராக இறங்குவார். ராபின் உத்தப்பா தொடக்க வீரராக இறக்கப்பட வாய்ப்பில்லை.

3ம் வரிசையில் மொயின் அலி, 4ம் வரிசையில் அம்பாதி ராயுடு, 5-6ம் வரிசைகளில் சூழலை பொறுத்து ஜடேஜா - ஷிவம் துபே ஆகிய இருவரில் ஒருவர் இறங்குவார். 7ம் வரிசையில் கேப்டன் தோனி. ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் தீபக் சாஹர் 8ம் வரிசையில் பேட்டிங்கும் ஆடுவார். 9ம் வரிசையிலும் ஆல்ரவுண்டர் தான். கிறிஸ் ஜோர்டான் அல்லது பிராவோ ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவார். 10வது வீரராக ஃபாஸ்ட் பவுலர் ஆடம் மில்னே ஆடுவார். 11வது வீரராக மற்றொரு ஃபாஸ்ட் பவுலராக இந்தியாவை சேர்ந்த சிமர்ஜீத் சிங் ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

கிறிஸ் ஜோர்டான்/பிராவோ ஆடவில்லை என்றால் ஸ்பின் ஆல்ரவுண்டர் மிட்செல் சாண்ட்னெர் அல்லது தீக்‌ஷனா ஆடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஏனெனில் தீபக் சாஹர், ஆடம் மில்னே ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஆடினால் ஷிவம் துபேவும் மிதவேகப்பந்து வீசுவார். ஜடேஜா - மொயின் அலியுடன் சேர்த்து இன்னொரு ஸ்பின்னர் தேவையென்றால் சாண்ட்னெரோ அல்லது தீக்‌ஷனாவோ ஆடலாம். 

இந்த முறை ஐபிஎல் போட்டிகள் மும்பை மற்றும் புனே ஆகிய 2 ஊர்களில் மட்டுமே நடத்தப்படவுள்ளது. எனவே கூடுதல் ஸ்பின்னர் ஆட வாய்பில்லை. ஆனால் அடுத்தடுத்த சீசன்கள் வழக்கம்போல நடத்தப்பட்டால் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி அதிக போட்டிகளில் ஆட நேரிடும். அதை கருத்தில்கொண்டுதான், அதிகமான ஸ்பின்னர்கள் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த சீசனில் பெரும்பாலும் ஜோர்டான் அல்லது பிராவோ ஆடுவதற்கான வாய்ப்புதான் அதிகம்.

சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், கிறிஸ் ஜோர்டான்/பிராவோ, ஆடம் மில்னே, சிமர்ஜீத் சிங்.