சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, 20 ஓவரில் 202 ரன்களை குவித்து, 203 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகள் ஆடிவருகின்றன. புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோனி தலைமையில் களமிறங்கியது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷான்க் சிங், வாஷிங்டன் சுந்தர், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, டெவான் கான்வே, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், ட்வைன் பிரிட்டோரியஸ், சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி, மஹீஷ் தீக்‌ஷனா.

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 17.5 ஓவரில் 182 ரன்களை குவித்தனர். 99 ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட், ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டு டி.நடராஜனின் பந்தில் ஆட்டமிழந்தார். டெவான் கான்வே 85 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். 20 ஓவரில் 202 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 203 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது.