Asianet News TamilAsianet News Tamil

RR vs CSK: சதத்தை தவறவிட்ட மொயின் அலி.. இன்னிங்ஸின் 2ம் பாதியில் RR அபார பவுலிங்..! எளிய இலக்கை நிர்ணயித்த CSK

ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் மொயின் அலி 93 ரன்களை குவித்தும் சிஎஸ்கே அணி 20 ஓவரில் 150 ரன்கள் மட்டுமே அடித்து, 151 ரன்கள் என்ற எளிய இலக்கை ராஜஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
 

csk set easy target to rajasthan royals in ipl 2022
Author
Mumbai, First Published May 20, 2022, 9:24 PM IST

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. இந்த சீசனில் இரு அணிகளுக்குமே இதுதான் கடைசி லீக் போட்டி. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளுமே தலா ஒரு மாற்றங்களுடன் களமிறங்கியது. சிஎஸ்கே அணியில் ஷிவம் துபேவுக்கு பதிலாக அம்பாதி ராயுடுவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜிம்மி நீஷமுக்கு பதிலாக ஷிம்ரான் ஹெட்மயரும் சேர்க்கப்பட்டனர்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஜெகதீசன், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், மதீஷா பதிரனா, முகேஷ் சௌத்ரி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவி அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், ஒபெட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா.

முதலில் பேட்டிங் ஆடிவரும் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்திலேயே வெறும் 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 2வது ஓவரில் வெறும் ஒரு ரன் மட்டுமே அடிக்கப்பட்டது. 3ம் வரிசையில் இறங்கிய மொயின் அலி, 4வது ஓவரிலிருந்து அடித்து ஆட ஆரம்பித்தார்.

பிரசித் கிருஷ்ணா வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய மொயின் அலி, அஷ்வின் வீசிய 5வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரையும், டிரெண்ட் போல்ட் வீசிய பவர்ப்ளேயின் கடைசி ஓவரான 6வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளையும் விளாசினார். 19 பந்தில் அரைசதம் அடித்தார் மொயின் அலி.

மொயின் அலியின் அதிரடியால் 6 ஓவரில் 73 ரன்களை குவித்தது. ஆனால் 8வது ஓவரில் டெவான் கான்வே ஆட்டமிழந்தபிறகு, ஜெகதீசன் ஒரு ரன்னிலும், ராயுடு 3 ரன்னிலும் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணியின் ஸ்கோர் வேகம் குறைந்தது. சிஎஸ்கே அணியின் ஆரம்ப ஸ்கோர் வேகத்தை கண்டு பதற்றமடையாமல் துணிச்சலாக கேப்டன்சி செய்து பவுலர்களை திறம்பட கையாண்டு அணியை வழிநடத்தினார் சஞ்சு சாம்சன்.

டெவான் கான்வே ஆட்டமிழந்த பின்னர் ரன் வேகம் குறைந்தது. சாஹலும் ஒபெட் மெக்காயும் இணைந்து சிஎஸ்கே அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தினர். மொயின் அலி 57 பந்தில் 93 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே தொடங்கிய வேகத்திற்கு 200 ரன்களுக்கு மேல் சென்றிருக்க வேண்டும். ஆனால் ராஜஸ்தான் பவுலர்கள் அபாரமாக பந்துவீசி ஸ்கோரை கட்டுப்பத்தினர். 20 ஓவரில் 150  ரன்கள் மட்டுமே அடித்த சிஎஸ்கே அணி, 151ரன்கள் என்ற எளிய இலக்கை ராஜஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios