சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 154 ரன்கள் அடித்து, 155 ரன்கள் என்ற சவாலான இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 15வது சீசனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் சிஎஸ்கேவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆடிவருகின்றனர். இரு அணிகளுமே இந்த சீசனில் இதற்கு முன் ஆடிய போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்ததால் முதல் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கின.

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ யான்சென், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.

சிஎஸ்கே அணி:

ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மஹீஷ் தீக்‌ஷனா, முகேஷ் சௌத்ரி.

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் இந்த போட்டியிலாவது நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராபின் உத்தப்பா 15 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் 16 ரன்னில் நடராஜன் பவுலிங்கில் வீழ்ந்தார்.

27 பந்தில் 27 ரன்கள் அடித்து அம்பாதி ராயுடு ஆட்டமிழந்தார். அடித்து ஆடிய மொயின் அலி 48 ரன்களுக்கு எய்டன் மார்க்ரமின் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். ஷிவம் துபேவை 3 ரன்னில் நடராஜன் வீழ்த்தினார். தோனியும் 3 ரன்னில் நடையை கட்டினார். சிஎஸ்கே அணி ஒரு கட்டத்தில் மோசமான ஸ்கோர் அடிக்கும் நிலை இருந்தது. ஆனால் ஜடேஜா 15 பந்தில் 23 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 154 ரன்கள் என்ற டீசண்ட்டான ஸ்கோரை அடித்தது சிஎஸ்கே.

இந்த ஆடுகளம் மெதுவாக இருப்பதால் இது கண்டிப்பாக சன்ரைசர்ஸுக்கு சவாலான இலக்காக இருக்கும். சிஎஸ்கே அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணியில் ஆடிய தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.