ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், சிஎஸ்கேவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இந்த சீசனின் முதல் 2 போட்டிகளிலும் சரியாக ஆடாதபோதிலும், தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பளித்தது சிஎஸ்கே அணி. ஆனால் இந்த போட்டியிலும் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார் ருதுராஜ்.

அடித்து ஆடிய ஃபாஃப் டுப்ளெசிஸ், 17 பந்தில் 33 ரன்கள் அடித்து மோரிஸின் பந்தில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 20 பந்தில் 26 ரன்கள் அடித்த மொயின் அலியும் ஆட்டமிழந்தார்.

ராயுடு(27), ரெய்னா(18), ஜடேஜா(8), தோனி(18), சாம் கரன்(13) என அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணியின் ரன் வேகம் குறைந்தது. பிராவோ கடைசியில் சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை முடிக்க, 20 ஓவரில் 188 ரன்கள் அடித்தது சிஎஸ்கே அணி. ராயுடு 14வது ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தபோது சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 123 ரன்கள். அதன்பின்னர் 40 பந்தில் சிஎஸ்கே அணி வெறும் 65 ரன்கள் மட்டுமே அடித்தது.
 
சிஎஸ்கே அணியில் டுப்ளெசிஸ், ராயுடு, ரெய்னா, மொயின் அலி என யாருமே கிடைத்த ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. அதனால் தான் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் குறைந்தது. இல்லையெனில் இன்னும் பெரிய ஸ்கோர் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது.