ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிகின்றன.

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிட்டன. கடைசி ஒரு இடத்திற்கு கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. முதலிடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி, முதலிடத்தை தக்கவைக்கும் முனைப்பிலும் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் வெற்றியுடன் முடிக்கும் முனைப்பிலும் மொஹாலியில் நடந்துவரும் போட்டியில் ஆடிவருகின்றன.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன், வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டுபிளெசிஸும் ரெய்னாவும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். இருவரும் அரைசதம் கடந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 120 ரன்களை சேர்த்தனர். அரைசதம் கடந்த ரெய்னா 53 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் டுபிளெசிஸூடன் தோனி ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய டுபிளெசிஸ், சதத்தை நெருங்கினார். சதத்திற்கு 4 ரன்களே தேவைப்பட்ட நிலையில், 96 ரன்களில் சாம் கரனின் செம யார்க்கரில் ஆட்டமிழந்தார். 

ஆனால் தோனி நின்றதால் கடைசி ஓவரில் அடித்து ரன்களை குவித்துவிடுவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி ஓவரை அபாரமாக வீசிய ஷமி, வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதையடுத்து 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 170 ரன்களை குவித்தது. 171 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் ஆடிவருகிறது. 

பேட்டிங்கிற்கு சாதகமான மொஹாலி ஆடுகளத்தில் 171 ரன்கள் என்பது எளிய இலக்கு.