நடந்து முடிந்த ஐபிஎல் 12வது சீசன், சிஎஸ்கே அணிக்கு 10வது சீசன். 10 சீசன்களில் 8 முறை சிஎஸ்கே இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த சீசனில் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸுடன் மோதிய சிஎஸ்கே, கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கோப்பையை கோட்டைவிட்டது. 

மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸுக்கு அடுத்த வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே தான் திகழ்கிறது. சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிகரமான அணியாக திகழ, அந்த அணியின் கேப்டன் தோனிதான் முக்கிய காரணம். 

சிஎஸ்கே அணியின் தூணே தோனிதான். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இறுதி போட்டியில் தோற்றதற்கு பின் பேசிய தோனியிடம் சஞ்சய் மஞ்சரேக்கர் அடுத்த சீசனில் ஆடுவது குறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த தோனி, அடுத்த சீசனில் ஆடுவது குறித்து உறுதியாக கூறாமல், ஆடுவேன் என்று நம்கிறேன் என்று தெரிவித்தார். 

தோனி உறுதியாக கூறாததையடுத்து ரசிகர்கள் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் இருந்தனர். இந்நிலையில், தோனி அடுத்த சீசனில் கண்டிப்பாக ஆடுவார் என்று சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதனால் தோனி ரசிகர்கள் சற்றே பெருமூச்சுவிடுகின்றனர்.