சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் சாஹர் ஆடுவது குறித்து சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் அப்டேட் செய்துள்ளார்.
சிஎஸ்கே அணி:
ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. சிஎஸ்கே அணி மொத்தமாக ரூ.87.05 கோடி கொடுத்து 25 வீரர்களை வாங்கியது. தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகிய 4 வீரர்களும் ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்ட நிலையில், ஏலத்தில் 21 வீரர்களை எடுத்தது.
ஏலத்தில் பிராவோ, அம்பாதி ராயுடு, தீபக் சாஹர், ராபின் உத்தப்பா ஆகிய பழைய வீரர்களை மீண்டும் எடுத்த சிஎஸ்கே அணி, டெவான் கான்வே, ஆடம் மில்னே, ட்வைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சாண்ட்னெர், கிறிஸ் ஜோர்டான், மஹீஷ் தீக்ஷனா ஆகிய வெளிநாட்டு வீரர்களை எடுத்தது. மேலும் உள்நாட்டு வீரர்களான திவம் துபே, கேஎம் ஆசிஃப், ஆகிய வீரர்களையும், அண்டர் 19 மற்றும் இளம் வீரர்கள் சிலரையும் ஏலத்தில் எடுத்தது.
சிஎஸ்கே வீரர்கள் சூரத்தில் பயிற்சி:
வரும் 26ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே அணி, கேகேஆர் அணியை எதிர்கொண்டு ஆடுகிறது. சிஎஸ்கே வீரர்கள் சூரத்திற்கு தஞ்சமடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
ருதுராஜ் மற்றும் தீபக் சாஹர் காயம்:
சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரும் காயம் காரணமாக அணியுடன் இணையவில்லை. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தான் கடந்த சீசனின் தொடர் நாயகன் ஆவார். கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதை வென்ற ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்த நிலையில், அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் கையில் காயம் காரணமாக அவர் இன்னும் அணியுடன் இணையவில்லை.
கையில் காயமடைந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தொடைப்பகுதியில் காயமடைந்த தீபக் சாஹர் ஆகிய இருவருமே பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுவருகின்றனர். அவர்கள் இருவரும் போட்டிகளில் ஆடுமளவிற்கு ஃபிட்னெஸை பெற்றால் மட்டுமே ஐபிஎல்லில் ஆடமுடியும். சீசனின் முதல் பாதியில் ஆடவில்லை என்றாலும், 2ம் பாதியில் வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவருமே அணிக்கு மிக முக்கியம் என்றவகையில், அவர்கள் குறித்த அப்டேட்டை கூறியுள்ளார் சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன்.
சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தகவல்:
இதுகுறித்து பேசிய காசி விஸ்வநாதன், ருதுராஜ் மற்றும் தீபக் சாஹரின் ஃபிட்னெஸ் குறித்து எங்களுக்கு தெரியவில்லை. அதனால் அவர்கள் எப்போது அணியில் இணைவார்கள் என்று சொல்ல முடியாது. இதுதொடர்பாக பிசிசிஐயிடம் கேட்டபோது, அவர்கள் போட்டியில் ஆடுமளவிற்கு ஃபிட்டானதும் தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துவிட்டார்கள். அவர்கள் இருவரும் என்சிஏவில் உள்ளனர் என்று காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
