மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவினாலும், சிஎஸ்கே அணி பவுலர்களின் பெர்ஃபாமன்ஸால் செம திருப்தி அடைந்துள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி.
ஐபிஎல் 15வது சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆடிய போட்டியில் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது.
சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடேவில் நடந்தது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங்கால் வெறும் 97 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் தோனி அதிகபட்சமாக 36 ரன்கள் அடித்தார். அவரது அந்த பங்களிப்பால் தான் சிஎஸ்கே அணி 97 ரன்களையாவது எட்டியது.
98 ரன்கள் என்பது மிக எளிதான இலக்குதான் என்றாலும் கூட, அதை மும்பை இந்தியன்ஸை எளிதாக அடிக்க அனுமதிக்கவில்லை சிஎஸ்கே பவுலர்கள். இந்த சீசனில் பவர்ப்ளேயில் அருமையாக பந்துவீசி தீபக் சாஹர் இல்லாத குறையை தீர்த்துவரும் முகேஷ் சௌத்ரி, மும்பைக்கு எதிராகவும் அபாரமாக பந்துவீசி பவர்ப்ளேயிலேயே இஷான் கிஷன், டேனியல் சாம்ஸ் மற்றும் ஸ்டப்ஸ் ஆகிய மூவரையும் வீழ்த்த, சிமர்ஜீத் சிங் ரோஹித்தை வீழ்த்த, பவர்ப்ளேயில் 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி அழுத்தத்திற்கு உள்ளானது. ஆனால் இலக்கு எளிதானது என்பதால் ஸ்கோர்போர்டு அழுத்தம் இல்லாததால், அடுத்துவந்த வீரர்கள் நிதானமாக ஆடி 15வது ஓவரில் இலக்கை அடித்து மும்பை அணி வெற்றி பெற்றது.
வெறும் 98 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடிக்கவிடாமல், 15வது ஓவர் வரை இழுத்துச்சென்றது சிஎஸ்கே அணி. அதற்கு சிஎஸ்கே பவுலர்கள் அருமையாக பந்துவீசியதுதான் காரணம். சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியிருந்தாலும், கேப்டன் தோனி அவரது அணி பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் மகிழ்ச்சியடைந்தார்.
போட்டிக்கு பின் பேசிய தோனி, எப்பேர்ப்பட்ட பிட்ச்சிலும் 130 ரன்களுக்கு குறைவாக அடித்தால் கட்டுப்படுத்துவது கடினம். அதனால் நான் எனது பவுலர்களிடம் என்ன சொன்னேன் என்றால், போட்டியின் முடிவை பற்றி கவலைப்படாமல், மன உறுதியுடன் உங்கள் கேரக்டரை காட்டுங்கள் என்றேன். 2 ஃபாஸ்ட் பவுலர்களுமருமையாக பந்துவீசினார்கள். இதுமாதிரியான குறைந்த ஸ்கோர் போட்டிகள், கண்டிப்பாக அந்த இளம் பவுலர்களுக்கு நம்பிக்கையளிக்கும் என்றார் தோனி.
