ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி இளம் வீரர்கள் பலரை எடுத்துள்ளது. ஆனால் அவர்களை பென்ச்சிலேயே உட்காரவைத்து அவர்களது கெரியரை முடித்துவிடாமல், அவர்களுக்கு வாய்ப்பளித்தால் தான் அந்த வீரர்களும் வளரமுடியும் என்பதை மனதில் வைத்து கேப்டன் தோனி அவர்களை ஆடவைக்க வேண்டும். 

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி சில சிறந்த இளம் வீரர்களை எடுத்துள்ளது. சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அனுபவம் வாய்ந்த வீரர்களை வைத்து ஆட விரும்புவதால், அந்த அணியில் கடந்த சில சீசன்களாக 35 வயதை கடந்த வீரர்கள் நிரம்பியிருந்தனர். அதனால் டேடிஸ் ஆர்மி என்று சிஎஸ்கே அணி கிண்டலடிக்கப்பட்டது. அந்த கிண்டலுக்கு உரமூட்டும் வகையில், 2020ம் ஆண்டு ஐபிஎல்லில் தோனி, கேதர் ஜாதவ், பிராவோ ஆகிய வீரர்கள் சொதப்பியதுடன் முதல் முறையாக அந்த சீசனில் பிளே ஆஃபிற்கு கூட முன்னேறாமல் லீக் சுற்றுடன் சிஎஸ்கே அணி வெளியேறியது.

2021ம் ஆண்டு ஐபிஎல்லில் 4வது முறையாக கோப்பையை வென்று, அதற்கு முந்தைய ஆண்டு அடைந்த தோல்விகள், பெற்ற அவமானங்களுக்கு பதிலடி கொடுத்தது சிஎஸ்கே அணி.

தோனி ஐபிஎல்லை விட்டு ஒதுங்கும் நேரம் கிட்டத்தட்ட வந்துவிட்டது. எனவே சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர்களை கொண்ட, அடுத்த 5-7 ஆண்டுகளுக்கான அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சிஎஸ்கே அணி, மெகா ஏலத்தில் மீண்டும் பழைய வீரர்களை எடுத்ததுடன், சில இளம் வீரர்களையும் எடுத்தது.

அம்பாதி ராயுடு, பிராவோ, ராபின் உத்தப்பா ஆகிய, ஏற்கனவே அணியில் ஆடிய சீனியர் வீரர்களுடன் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (ஆல்ரவுண்டர்), பிரஷாந்த் சோலங்கி, ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகிய இளம் வீரர்களையும் சிஎஸ்கே அணி எடுத்துள்ளது.

இவர்களில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், இந்த ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய அண்டர் 19 அணியில் அங்கம் வகித்தவர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே ஜொலிக்கக்கூடிய ஆல்ரவுண்டர். இவர் சிஎஸ்கே அணியின் சிறந்த தேர்வு.

அதேபோல தமிழகத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் ஹரி நிஷாந்த், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் ஆகியோரையும் சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. ஆனால் இவர்களை எடுத்தது பெரிதல்ல. அவர்களது திறமையை வெளிப்படுத்தி சிஎஸ்கே அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுப்பதுடன், அவர்களும் வளர்ச்சியடைய ஏதுவாக ஆடும் லெவனில் வாய்ப்பளிக்க வேண்டும்.

தோனி பொதுவாக நன்றாக செட் ஆன அணியை வைத்தே ஆடவிரும்புவார். அணியில் பெரிதாக மாற்றங்களையும் செய்யமாட்டார். அணியில் தேவையில்லாத மாற்றங்களை செய்ய தேவையில்லை என்றாலும், பென்ச்சில் சும்மாவே உட்கார்ந்திருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முனைய வேண்டும். தோனியின் சிஎஸ்கே அணியில் அவரது ஆஸ்தான வீரர்கள் சிலர் தான் கடந்த பல ஆண்டுகளாகவே ஆடிவந்திருக்கின்றனர். திறமையான இளம் வீரர்கள் பலர் சிஎஸ்கே அணியில் பென்ச்சில் உட்கார்ந்தே காணாமல் போய்விட்டனர். சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் திறமையை நிரூபித்து பெரியளவில் வளர்ந்துவிட்டார். ஆனால் அவரைப்போன்ற திறமைசாலிகள் பலர் வாய்ப்பே கிடைக்காமல் காணாமல் போயுள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டு சிஎஸ்கே படுதோல்வி அடைந்த அந்த சீசனில் கூட, தமிழக வீரர் ஜெகதீசனுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கேதர் ஜாதவ் தொடர்ந்து சொதப்பியபோதிலும், அவரை அணியில் வைத்து தொடர் வாய்ப்பளித்த தோனி, ஜெகதீசனுக்கு கண் துடைப்புக்கு ஒரு வாய்ப்பளித்துவிட்டு உட்காரவைத்துவிட்டார். தோனியின் ஐபிஎல் கெரியர் முடிவுக்கு வரப்போகிறது. எனவே தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பரான ஜெகதீசனுக்கு போதுமான வாய்ப்புகளை அளித்து சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக அவரை வளர்த்துவிட வேண்டும் தோனி.

அதேபோல பேட்ஸ்மேன் ஹரி நிஷாந்த், ஆல்ரவுண்டர் ஹங்கர்கேகர் ஆகியோருக்கும் போதுமான வாய்ப்புகளை அளித்து அடுத்த தலைமுறை அணியை கட்டமைக்க வேண்டும். அவர்களது வளர்ச்சிக்கும் வித்திட வேண்டும். அதைவிடுத்து இன்னும் ராயுடு, உத்தப்பா, பிராவோவை பிடித்தே தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது.

சிஎஸ்கே அணி:

தக்கவைத்த வீரர்கள்: தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி

ஏலத்தில் எடுத்த வீரர்கள்: அம்பாதி ராயுடு, ட்வைன் பிராவோ, ராபின் உத்தப்பா, தீபக் சாஹர், கேஎம் ஆசிஃப், ஷிவம் துபே, மஹீஷ் தீக்‌ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிமர்ஜீத் சிங், டெவான் கான்வே, ட்வைன் ப்ரிட்டோரியஸ், மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, சுப்ரன்ஷு சேனாபதி, பிரஷாந்த் சோலங்கி, முகேஷ் சௌத்ரி, ஹரி நிஷாந்த், ஜெகதீசன், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா.