சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வருகிறார் பென் ஸ்டோக்ஸ். உலக கோப்பை இறுதி போட்டியில் தனி ஒருவனாக போராடி, இங்கிலாந்து அணிக்கு முதல் உலக கோப்பையை வென்று கொடுத்தார் பென் ஸ்டோக்ஸ். 

உலக கோப்பை இறுதி போட்டியில் ஆடிய இன்னிங்ஸ்தான், ஸ்டோக்ஸின் கெரியரில் சிறந்த இன்னிங்ஸாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் அதைவிட சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடி கிரிக்கெட் உலகில் தலைநிமிர்ந்து கெத்தாக வலம்வருகிறார் ஸ்டோக்ஸ். 

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 359 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, 286 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் கடைசி வீரரை மறுமுனையில் வைத்துக்கொண்டு, வெற்றிக்கு தேவையான ரன்களில் ஒரு ரன்னை தவிர மற்ற அனைத்து ரன்களையும் தனி ஒருவனாக குவித்து, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இங்கிலாந்து அணிக்கு பெற்று கொடுத்தார் ஸ்டோக்ஸ். 

லீட்ஸில் நடந்த அந்த போட்டியும், ஸ்டோக்ஸின் அபாரமான அந்த இன்னிங்ஸும் காலத்தால் அழியாதவை. கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்தவை. ஸ்டோக்ஸின் மிகச்சிறந்த அந்த இன்னிங்ஸை முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தாறுமாறாக புகழ்ந்துவருகின்றனர். 

இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் சச்சினுடன் இருக்கும் புகைப்படத்தை, உலக கோப்பைக்கு பின் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பைக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஆல்டைம் சிறந்த வீரர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் என்று பதிவிட்டிருந்தது. ஆஷஸ் போட்டியில் ஸ்டோக்ஸ் அசத்தியதை அடுத்து, நாங்கள் தான் அப்பவே சொன்னோம் அல்லவா? என்று ஐசிசி பதிவிட்டுள்ளது. 

சச்சினை விட சிறந்த வீரர் பென் ஸ்டோக்ஸ் என்கிற ரீதியில் ஐசிசி பதிவிட்டுள்ள இந்த டுவீட்டை கண்டு ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள், 100 சர்வதேச சதங்கள் என ஜாம்பவானாக திகழும் சச்சின் டெண்டுல்கரைவிட ஸ்டோக்ஸ் சிறந்த வீரரா? என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர். ஸ்டோக்ஸ் நல்ல வீரர் தான்; அதற்காக சச்சினைவிட சிறந்த வீரர் என்று சொல்லக்கூடாது என்று தெரிவித்துவருகின்றனர்.