ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் ஆஸி., வீரர்கள் ஆடுவது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா கருத்து தெரிவித்துள்ளது. 

ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அத்துடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

எஞ்சிய 31 போட்டிகளை, இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்ததும், செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில்நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

அக்டோபர் 18ம் தேதி டி20 உலக கோப்பை தொடங்கவுள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கிரிக்கெட் தொடர்களில் ஆடுகின்றன. டி20 உலக கோப்பையும் நடக்கவுள்ளதால், தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இருப்பதால், சில நாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுவது சந்தேகம் தான்.

குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடுவது கண்டிப்பாக சந்தேகம். இதுதொடர்பாக பிசிசிஐ, வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. 

ஐபிஎல் 14வது சீசன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதையடுத்து, இந்தியாவிலிருந்து மாலத்தீவு வழியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்ற அந்நாட்டு வீரர்கள், குவாரண்டினை முடித்துவிட்டு இன்றுதான் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஆஸி., வீரர்கள் ஐபிஎல் மீத போட்டிகளில் ஆடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய சி.இ.ஓ நிக் ஹாக்லி, இன்றுதான் ஆஸி., வீரர்கள் வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் ஆடுவது குறித்து விவாதிக்கப்படும். இப்போதைக்கு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.