கடந்த பத்தாண்டில் சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட ஒருநாள் அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்திருந்தது. அதை ஏற்கனவே பார்த்தோம். கடந்த பத்தாண்டின் தலைசிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள் அணி.. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தேர்வில் 3 இந்திய வீரர்கள்

இப்போது, கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சிய 11 வீரர்களை கொண்ட, கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த டெஸ்ட் அணியை பார்ப்போம். 

பத்தாண்டின் சிறந்த அணியின் தொடக்க வீரர்களாக இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்றாம் வரிசை வீரராக கேன் வில்லியம்சனும் நான்காம் வரிசை வீரராக ஸ்டீவ் ஸ்மித்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஐந்தாம் வரிசை வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விராட் கோலி தான் இந்த அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 2014ம் ஆண்டு தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, டெஸ்ட் அணிக்கு தலைமை பொறுப்பேற்றார் கோலி. 

விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி, இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் டெஸ்ட் வெற்றிகளை குவித்துவருகிறது. ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வென்றது. கோலியின் தலைமையில் இந்திய அணி இந்த வரலாற்று சாதனையை படைத்தது. 

கோலி தலைமையில் இந்திய அணி 33 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான வெற்றிகளை குவித்து கொடுத்த வெற்றிகரமான கேப்டனாக கோலி திகழ்கிறார். அதுமட்டுமல்லாமல், நடந்துவரும் அறிமுக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இதுவரை ஆடிய ஒரு போட்டியில் கூட தோற்காமல் 360 புள்ளிகளை பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இந்திய அணி. கோலியின் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சுகிறது. 

அந்தவகையில், பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணிக்கு கோலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. விராட் கோலிக்கு அடுத்த பேட்டிங் ஆர்டரில் டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தான் விக்கெட் கீப்பரும் கூட. இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. 

ஃபாஸ்ட் பவுலர்களாக தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஸ்பின் பவுலராக ஆஸ்திரேலியாவின் நாதன் லயனை தேர்வு செய்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இந்த அணியில் அஷ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணி:

1. அலெஸ்டர் குக்(இங்கிலாந்து)

2. டேவிட் வார்னர்(ஆஸ்திரேலியா)

3. கேன் வில்லியம்சன்(நியூசிலாந்து)

4. ஸ்டீவ் ஸ்மித்(ஆஸ்திரேலியா)

5. விராட் கோலி(இந்தியா) - கேப்டன்

6. ஏபி டிவில்லியர்ஸ்(தென்னாப்பிரிக்கா) - விக்கெட் கீப்பர்

7. பென் ஸ்டோக்ஸ்(இங்கிலாந்து)

8. டேல் ஸ்டெய்ன்(தென்னாப்பிரிக்கா)

9. ஸ்டூவர்ட் பிராட்(இங்கிலாந்து)

10. நாதன் லயன்(ஆஸ்திரேலியா)

11. ஜேம்ஸ் ஆண்டர்சன்(இங்கிலாந்து)