Asianet News TamilAsianet News Tamil

#ENGvsNZ கான்வே இரட்டை சதம்.. மிடில் ஆர்டர் சொதப்பலால் எதிர்பார்த்ததை விட குறைவான ரன்னுக்கு சுருண்ட நியூசி.,

நியூசிலாந்து தொடக்க வீரர் டெவான் கான்வேவின் இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 378 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.
 

conway double century and new zealand all out for 378 runs in first innings of first test against england
Author
London, First Published Jun 3, 2021, 7:59 PM IST

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் கான்வே இணைந்து முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் அடித்தனர். லேதம் 23 ரன்களில் இங்கிலாந்து அறிமுக பவுலர் ராபின்சனின் பந்தில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அனுபவ வீரர் ரோஸ் டெய்லரையும் 14 ரன்னில் ராபின்சன் வெளியேற்றினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய கான்வேவுடன், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹென்ரி நிகோல்ஸ் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடினார்.

அபாரமாக ஆடிய கான்வே சதமடிக்க, நிகோல்ஸ் அரைசதம் அடித்தார். கான்வேவும் நிகோல்ஸும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 174 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த நிகோல்ஸ் 61 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கான்வே மட்டும் களத்தில் நிற்க, மறுமுனையில் வாட்லிங் ஒரு ரன்னிலும், காலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் சாண்ட்னெர் ஆகிய இருவரும் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, ஜாமிசன் 9 ரன்னிலும் சௌதி 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்த கான்வேவுடன் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாக்னர், அடித்து ஆடி 21 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 25 ரன்கள் அடிக்க, இரட்டை சதமடித்த கான்வே, சரியாக 200 ரன்னில் ரன் அவுட்டாக, முதல் இன்னிங்ஸில் 378 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து அணி. கான்வேவும் நிகோல்ஸும் இணைந்து ஆடியபோது மெகா ஸ்கோரை நியூசிலாந்து அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாட்லிங், கிராண்ட் ஹோம், சாண்ட்னெர் ஆகிய பின்வரிசை வீரர்கள்  படுமோசமாக சொதப்பியதால் 378 ரன்களுக்கே சுருண்டது நியூசி., அணி.

இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios