கனடா டி20 லீக் தொடரில் முதல் தகுதிச்சுற்று போட்டியில் வான்கூவர் நைட்ஸ் மற்றும் ப்ராம்ப்டன் வால்வ்ஸ் அணிகள் மோதின. 

மழையால் இந்த போட்டி தாமதமாக தொடங்கப்பட்டதால் 16 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வான்கூவர் நைட்ஸ் அணியின் தொடக்க வீரர் வைசி, கேப்டன் ஷோயப் மாலிக் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இவர்கள் மூவரின் அதிரடியால் அந்த அணி 16 ஓவரில் 170 ரன்களை குவித்தது. 

16 ஓவரில் 171 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ப்ராம்ப்டன் வால்வ்ஸ் அணியில் அந்த அணியின் கேப்டன் முன்ரோவை தவிர மற்ற அனைவருமே சொதப்பினர். முன்ரோ மட்டும் 25 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டானதால் அந்த அணி 13.4 ஓவரில் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து வான்கூவர் நைட்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முன்ரோ 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 62 ரன்களை குவித்தார். வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார் முன்ரோ. கனடா டி20 லீக்கில் இதுதான் அதிவேக அரைசதம். ஒட்டுமொத்த டி20 வரலாற்றில் இது 12வது விரைவான அரைசதம்.