இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போல கரீபியன் பிரீமியர் லீக், பிக்பேஷ் லீக், கனடா டி20 லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என உலகம் முழுதும் டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டுவருகின்றன. 

பாகிஸ்தானை தவிர மற்ற நாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுகின்றனர். ஆனால் இந்திய வீரர்களுக்கு வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. பிசிசிஐயின் இந்த கட்டுப்பாடு யுவராஜ் சிங்கிற்காக தளர்த்தப்பட்டது. 

அண்மையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற யுவராஜ் சிங், கனடா டி20 லீக்கில் ஆடுவதற்கு பிசிசிஐ தடையில்லா சான்று அளித்தது. அவரும் கனடா டி20 லீக்கில் டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். 

யுவராஜ் சிங்கிற்கு வெளிநாட்டு டி20 லீக் தொடரில் ஆட பிசிசிஐ தடையில்லா சான்று வழங்கியிருந்ததால் மற்ற சில முன்னாள் வீரர்களும் வெளிநாட்டு தொடர்களில் ஆடலாம் என்கிற எண்ணத்தில் இருந்தனர். ஆனால் யுவராஜ் சிங்கின் கேஸ் வேறு. அதற்காக மற்ற வீரர்களுக்கு வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட தடையில்லா சான்று வழங்கப்பட மாட்டாது என்று சிஓஏ தெரிவித்துவிட்டது. 

சிஓஏ-வின் ஒருதலைபட்சமான முடிவு பிசிசிஐ அதிகாரிகளை அதிர்ச்சிக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது. அனைத்து வீரர்களும் ஒரேமாதிரியாக நடத்தப்பட வேண்டும். யுவராஜ் சிங்கிற்கு மட்டும் வெளிநாட்டு டி20 லீக் தொடரில் ஆட அனுமதியளித்துவிட்டு, மற்றவர்களுக்கு முடியாது என்று சொல்வது பிசிசிஐ அதிகாரிகளை அதிருப்தியடைய செய்துள்ளது.