உலக கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் ஆடிவருகின்றன. 

லண்டன் லார்ட்ஸில் இறுதி போட்டி நடந்துவருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றிராத நியூசிலாந்தும் இங்கிலாந்தும் இறுதி போட்டியில் ஆடிவருவதால், இரு அணிகளில் ஒன்று முதன்முறையாக கோப்பையை வெல்லவுள்ளது. 

உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணி தான் வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் ஆருடம் தெரிவித்தனர். இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. ஆனால் இங்கிலாந்து அணி இறுதி போட்டியில் ஆடிவருகிறது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி குறித்து கருத்து கூறிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கிளைவ் லாயிட், இந்திய அணியை எந்த அணி வீழ்த்துகிறதோ அந்த அணி தான் கோப்பையை வெல்லும் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

இப்போது கிளைவ் லாயிட் சொன்னதுதான் நடக்கப்போகிறது. இந்த உலக கோப்பையில் இந்திய அணி தோற்றது இரண்டே அணிகளிடம் தான். லீக் சுற்றில் இங்கிலாந்திடமும், அரையிறுதியில் நியூசிலாந்திடமும் இந்திய அணி தோற்றது. இந்திய அணியை வீழ்த்திய 2 அணிகள் தான் இறுதி போட்டியில் ஆடிவருகின்றன.

கிளைவ் லாயிட், 1975 மற்றும் 1979 ஆகிய இரண்டு உலக கோப்பைகளையும் அடுத்தடுத்து வெஸ்ட் இண்டீஸிற்கு வென்று கொடுத்த கேப்டன். கிளைவ் லாயிட் எப்பேர்ப்பட்ட லெஜண்ட் என்பதை அவரது இந்த உலக கோப்பை குறித்த கணிப்பின் மூலம் இந்தக்காலத்து கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்துகொள்ள முடியும்.