உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையில் ஆடும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் இந்த உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் ஆருடம் தெரிவித்துள்ளனர். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருகிறது. இந்திய அணியில் முன்னெப்போதையும் விட ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எதிரணிகளை தெறிக்கவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் ஜோடி ஸ்பின்னில் மிரட்டுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது.

அதேபோல இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. இயன் மோர்கன், ஜேசன் ராய், பட்லர், பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் என அந்த அணி நல்ல பலம் வாய்ந்த சிறப்பான அணியாக இருப்பதுடன் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலம். அதனால் உலக கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கான வாய்ப்புகள் தான் பிரகாசமாக இருப்பதாக பல முன்னாள் ஜாம்பவான்கள் பார்க்கின்றனர்.

ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பியிருப்பதால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை மீண்டும் வெல்லும் முனைப்பில் உள்ளது. அந்த அணி பேட்டிங், பவுலிங் என சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது. 

பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் 2009ல் நடந்த டி20 உலக கோப்பை மற்றும் 2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஆகிய சர்வதேச கோப்பைகளை வென்றுள்ளது. எனவே பாகிஸ்தான் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணியும் இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தித்தான் ஆடும். தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் தொடரில் கூட சிறப்பாகவே ஆடிவருகிறது. 

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. இவ்வாறு ஒவ்வொரு அணியுமே சிறந்த அணியாக திகழும் நிலையில், உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகள் குறித்து பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 1975 மற்றும் 1979 ஆகிய இரண்டு உலக கோப்பைகளை வென்று கொடுத்தவர் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட். இந்த உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ள கிளைவ் லாயிட், 1983லிருந்தே நான் பார்க்கிறேன்; எந்த அணி வெல்லும் என்று அனைவரும் கருதுகின்றனரோ அந்த அணி வென்றதேயில்லை. 1992ல் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்றோ 1996 கோப்பையை இலங்கை வெல்லும் என்றோ யாருமே நினைக்கவில்லை. இதுவரை இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்லாதது எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த முறை இங்கிலாந்து வெல்ல வாய்ப்பு அதிகம். அந்த அணி கடந்த சில ஆண்டுகளாக ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. இந்த உலக கோப்பையில் கண்டிப்பாக இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தும் என கிளைவ் லாயிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.