டி10 லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதில் மராத்தா அரேபியன்ஸ் அணியில் கிறிஸ் லின் ஆடிவருகிறார். கடந்த இரண்டு சீசன்களில் கிறிஸ் லின் ஐபிஎல்லில்  பெரிதாக ஆடவில்லை. அவரிடம் இருந்து அணி எதிர்பார்த்த அதிரடி தொடக்கம், சீராகவும் நிலையாகவும் கிடைக்கவில்லை. எனவே அவரை கேகேஆர் அணி கழட்டிவிட்டுள்ளது. 

கேகேஆர் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட லின், அபுதாபி அணிக்கு எதிரான டி10 போட்டியில் காட்டடி அடித்துள்ளார். மராத்தா அரேபியன்ஸ் மற்றும் டீம் அபுதாபி ஆகிய அணிகளுக்கு இடையேயான டி10 போட்டி அபுதாபியில் நடந்தது. 

இந்த போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும் ஆஃப்கானிஸ்தான் தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா சேசாயும் இறங்கினர். சேசாய் வெறும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கிறிஸ் லின், எதிரணி பவுலர்கள் போடும் பந்தை எல்லாம் அடித்தார். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய லின், 18 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். 

அதன்பின்னரும் தொடர்ச்சியாக அடித்து ஆடினார். வெறும் 30 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 91 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் லின். டி10 போட்டியில் லின் அடித்த இதுதான் அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் அலெக்ஸ் ஹேல்ஸ் 32 பந்துகளில் 87 ரன்கள் அடித்ததுதான் டி10 போட்டியில் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை முறியடித்து டாப் ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார் லின்.

லின்னின் அதிரடியான பேட்டிங்கால் மராத்தா அரேபியன்ஸ் 10 ஓவரில் 138 ரன்களை குவித்தது. 139 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆடிய அபுதாபி அணி 10 ஓவரில் 114 ரன்கள் அடித்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.