ஐபிஎல் ஏலத்தில் கேகேஆர் அணியால் ரூ.1 கோடிக்கு எடுக்கப்பட்ட இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்ட்டன், பிக்பேஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஆடிவருகிறார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 36 பந்தில் 64 ரன்களை குவித்து அசத்தினார். 

இதையடுத்து, டெல்லி கேபிடள்ஸ் அணியால் ரூ.4.8 கோடிக்கு எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், தொடக்க வீரராக இறங்கி 54 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்து அசத்தினார். 

இந்நிலையில், கேகேஆர் அணியால் கழட்டிவிடப்பட்டு, மும்பை அணியால் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எடுக்கப்பட்ட, ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கிறிஸ் லின் பிக்பேஷ் போட்டியில் காட்டடி அடித்துள்ளார். 

2014ம் ஆண்டிலிருந்து 6 சீசன்களில் தங்கள் அணியில் ஆடிய கிறிஸ் லின்னை கேகேஆர் அணி கழட்டிவிட்டது. 13வது சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில், கிறிஸ் லின்னை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. கிறிஸ் லின்னை எடுக்க மும்பை அணி முன்வந்ததும், வேறு எந்த அணியுமே லின்னை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி லின்னை எடுத்தது. Also Read: ஏலத்தில் எடுத்த டெல்லி கேபிடள்ஸ் அணியை குஷிப்படுத்திய ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்.. பிக்பேஷ் லீக்கில் செம அடி

ஐபிஎல் ஏலத்தில் தனக்கு கிராக்கி இல்லை என்ற கோபமா என்று தெரியவில்லை, பிக்பேஷ் லீக்கில் செம காட்டு காட்டியிருக்கிறார் லின். பிரிஸ்பேன் ஹீட் அணியின் கேப்டனான கிறிஸ் லின், சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிராக நடந்துவரும் போட்டியில், வெறும் 35 பந்தில் 94 ரன்களை குவித்தார். 

இந்த போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் தொடக்க விரர்கள் இருவருமே சரியாக ஆடவில்லை.  ஆனால் மூன்றாம் வரிசையில் களத்திற்கு வந்த கிறிஸ் லின் சிக்ஸர் மழை பொழிந்தார். அதிரடியாக ஆடி ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்களை பறக்கவிட்ட லின், 20 பந்தில் அரைசதம் கடந்தார். அதன்பின்னரும் அதிரடியாக ஆடி சிட்னி மைதானம் முழுவதும் சிக்ஸர்களாக பறக்கவிட்ட லின், வெறும் 35 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 94 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

10வது ஓவரின் நான்காவது பந்தில் லின் அவுட்டாகும்போது, பிரிஸ்பேன் ஹீட் அணியின் ஸ்கோர் 113 ரன்கள். ஆனால் அதன்பின்னர் வந்த வீரர்கள் பெரியளவில் அடித்து ஆடாததால், அந்த அணி 20 ஓவரில்  209 ரன்கள் தான் அடித்தது. 

கிறிஸ் லின்னின் டாப் ஃபார்மையும் அவரது வெறித்தனமான பேட்டிங்கையும் பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் ரசிகர்களும் செம உற்சாகத்திலும் குஷியிலும் உள்ளனர்.