கனடா டி20 லீக் தொடரில் மாண்ட்ரியல் டைகர்ஸ் அணிக்கு எதிராக வான்கூவர் நைட்ஸ் அணியின் கேப்டன் கெய்ல் காட்டடி அடித்து சதம் விளாசினார். 

கனடா டி20 லீக் தொடரில் கெய்ல் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் மற்றும் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான மாண்ட்ரியல் டைகர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வான்கூவர் நைட்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

வான்கூவர் அணியின் கேப்டன் கெய்ல், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய வைசியும் அதிரடியாக ஆடினார். வைசி வெறும் 19 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன்  51 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் வால்டன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கெய்லுடன் ஜோடி சேர்ந்த வாண்டெர் டசனும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். தொடக்கம் முதலே மாண்ட்ரியல் அணியின் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்த கெய்ல், வெறும் 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 122 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அடித்து ஆடிய வாண்டெர் டசன் 25 பந்துகளில் 56 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 

கெய்ல், வைசி, வாண்டெர் டசன் ஆகியோரின் காட்டடியால் வான்கூவர் நைட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 276 ரன்களை குவித்தது. இதுதான் டி20(சர்வதேச போட்டி, உலகளவில் நடக்கும் அனைத்து லீக் தொடர்கள் உட்பட) வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்துக்கு எதிராக அடித்து 278 ரன்கள் தான் டாப் ஸ்கோர். வான்கூவர் நைட்ஸ் அணி இன்னும் 3 ரன்கள் அடித்திருந்தால் அந்த சாதனையை முறியடித்திருக்கும். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.

277 ரன்கள் என்ற கடின இலக்கை மாண்ட்ரியல் டைகர்ஸ் அணி விரட்டவேயில்லை. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் கனமழை காரணமாக நடக்கவேயில்லை.