நடந்துவரும் கனடா டி20 லீக் தொடரில் கிறிஸ் கெய்ல் செம அதிரடியாக ஆடிவருகிறார். ஏதாவது ஒரு போட்டியில் என்றில்லாமல், எல்லா போட்டியிலுமே அடித்து ஆடிவருகிறார். 

கனடா டி20 லீக் தொடரில் வான்கூவர் நைட்ஸ் அணியின் கேப்டனாக இருந்துவரும் கெய்ல், மாண்ட்ரீயல் டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் விளாசினார். 

இந்நிலையில், எட்மாண்டன் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அபாரமாக ஆடிய கெய்ல், 6 ரன்களில் சதத்தை தவறவிட்டார். ஆனால் அவரது அதிரடி பேட்டிங், வான்கூவர் அணி எளிதாக வெற்றி பெற காரணமாக அமைந்தது. 

வான்கூவர் நைட்ஸ் மற்றும் எட்மாண்டன் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராயல்ஸ் அணி, பென் கட்டிங்கின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் அடித்தது. பென் கட்டிங் 41 பந்துகளில் 72 ரன்களை குவித்தார். 

166 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய வான்கூவர் நைட்ஸ் அணியின் தொடக்க வீரர் வைசி வெறும் ஒரு ரன்னில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த வால்டனும் சோபிக்கவில்லை. அதன்பின்னர் ஷோயப் மாலிக் கெய்லுடன் ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய கெய்ல், 44 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 94 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 6 ரன்களில் சதத்தை தவறவிட்டு வெளியேறினார் கெய்ல். 

அதிரடியாக ஆடிய ஷோயப் மாலிக் 17 பந்துகளில் 34 ரன்களை குவித்தார். கெய்ல் மற்றும் மாலிக்கின் அதிரடியால் 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது வான்கூவர் நைட்ஸ் அணி.