இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், பிசிசிஐயிடமிருந்து எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார் என்பது குறித்த தகவல்கள் இங்கே.
Pujara's Retirement: BCCI Pension Details Revealed! இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச் சுவர்' என்று அழைக்கப்படும் சேதேஷ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் கணக்குகள் மூலம் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், தனது கிரிக்கெட் பயணத்தை நினைவு கூர்ந்து உணர்ச்சிபூர்வமான பதிவை வெளியிட்டார். புஜாரா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பல போட்டிகளில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து புஜாரா ஓய்வு
புஜாரா கடைசியாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார். அதன் பிறகு, அவரது ஆட்டத்திறன் சரிந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முடிவு செய்ததால் மீண்டும் அவரால் மீண்டும் அணிக்கு திரும்ப முடியவில்லை. ஓய்வு பெற்று விட்டதால் இனி புஜாராவுக்கு பிசிசிஐயிடம் இருந்து எவ்வளவு பென்சன் கிடைக்கும்? என்பது குறித்து பார்ப்போம்.
பிசிசிஐ ஓய்வூதிய விதிகள் என்ன?
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வூதியம் வழங்குகிறது. ஜூன் 1, 2022 முதல், வீரர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.70,000 வரையிலும், வீராங்கனைகளுக்கு ரூ.45,000 முதல் ரூ.52,500 வரையிலும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. சர்வதேச மற்றும் முதல் தர போட்டிகளில் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் போன்ற வீரர்களுக்கு மாதம் ரூ.70,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. முன்னாள் வீரர்களின் பங்களிப்பு மற்றும் ஆட்டத்திறனைப் பொறுத்து ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது.
புஜாரா எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார்?
புஜாரா 103 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டி20 போட்டிகளில் விளையாடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அவர் அளித்த பங்களிப்பு மகத்தானது. 103 டெஸ்ட் போட்டிகளில் 44.4 சராசரியுடன் 7195 ரன்கள் குவித்துள்ளார். 19 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அடித்துள்ளார். நிபுணர்களின் கூற்றுப்படி, புஜாராவின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு பிசிசிஐ அவருக்கு மாதம் ரூ.60,000 ஓய்வூதியம் வழங்க வாய்ப்புள்ளது.
