ஐபிஎல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், தனுஷ் பட பாடலை பின்னணியாக கொண்டு தோனி மற்றும் மற்ற சிஎஸ்கே வீரர்களை வைத்து எடிட் செய்து சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.

ஐபிஎல் 13வது சீசன் நடப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கியிருக்க வேண்டிய டி20 உலக கோப்பை ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதால், செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரையிலான காலக்கட்டத்தில் ஐபிஎல்லை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

எனவே ஐபிஎல் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குவது உறுதியாகிவிட்டதால், அதற்கான வேலைகளில் பிசிசிஐ-யும் ஐபிஎல் நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது. வீரர்களும் பயிற்சிகளை தொடங்கிவிட்டனர். 

சிஎஸ்கே அணி மற்ற அணிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவுள்ளதாக தெரிகிறது. ஐபிஎல் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், ரசிகர்களை உற்சாகமாகவும் கொண்டாட்டமாகவும் வைத்திருக்கும் வகையில் சிஎஸ்கே அணி, ஒரு வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் முதல் பாடல் கடந்த சில தினங்களுக்கு வெளியிடப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசையில் ரகிட ரகிட என்ற அந்த பாடலை பின்னணியாகக்கொண்டு சிஎஸ்கே கேப்டன் தோனி மற்றும் ரெய்னா, பிராவோ ஆகியோரை வைத்து எடிட் செய்து ஒரு வீடியோவை சிஎஸ்கே சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ செம வைரலாகிவருகிறது. இதற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அந்த வீடியோவை அவரும் பகிர்ந்துள்ளார்.