தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா முதன்முறையாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கவுள்ளார். ரோஹித்துடன் மயன்க் அகர்வால் தொடக்க வீரராக இறங்குகிறார். புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் அடுத்தடுத்த வரிசைகளில் இறங்குவார்கள். 

விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக யார் அணியில் எடுக்கப்படுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக திரும்பும் என்பதால், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனை பொறுத்தமட்டில், பேட்டிங்கை பொருட்படுத்தாமல் விக்கெட் கீப்பிங்கில் சிறந்தவரையே அணியில் எடுக்க வேண்டும். அந்தவகையில் விக்கெட் கீப்பிங்கில் சிறந்தவரான ரிதிமான் சஹா தான் சரியான தேர்வாக இருப்பார் என முன்னாள் விக்கெட் கீப்பர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். 

கேப்டன் கோலியும் முன்பே இதுகுறித்த சமிக்ஞையை கொடுத்திருந்தார். இந்நிலையில், முதல் போட்டியில் ரிதிமான் சஹா தான் ஆடுவார் என்பதை கேப்டன் கோலி உறுதி செய்துள்ளார். நாளை போட்டி தொடங்கவுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோலி, ரிதிமான் சஹா தான் ஆடுவார் என்று தெரிவித்தார். 

கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய சஹா, காயமடைந்ததால் அதன்பின்னர் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக டெஸ்ட் அணியில் ஆடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அணியில் இடம்பெற்றிருந்தபோதிலும், ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார் சஹா.