வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததற்கான காரணத்தை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் ஆகியோர் இருக்கும் நிலையில், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் நல்ல ஆல்ரவுண்டர்களாக உருவெடுத்துவிட்டனர். இன்னும் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் வெளியே உள்ளனர்.
அதிலும் குறிப்பாக டி20 அணியில் போட்டி மிகக்கடுமையாக உள்ளது. ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆடாத நிலையிலேயே இவ்வளவு போட்டி நிலவுகிறது. அவர்களும் வந்துவிட்டால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ராகுல் விலகிவிட்டதால், முதல் டி20 போட்டியில் ரோஹித்துடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்கினார். 3ம் வரிசையில் விராட் கோலி. 4ம் வரிசையில் ரிஷப் பண்ட் ஆடினார். 5ம் வரிசையில் சூர்யகுமார் யாதவும், அவரைத்தொடர்ந்து வெங்கடேஷ் ஐயரும் இறங்கினர்.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக ஆடிவரும் ஷ்ரேயாஸ் ஐயர், டி20 போட்டிகளிலும் அவரது பணியை செவ்வனே செய்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. வெங்கடேஷ் ஐயர் சேர்க்கப்பட்டிருந்தார்.
போட்டிக்கு பின்னர் அதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் ஆடாதது குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் மாதிரியான சிறந்த வீரரை வெளியே பென்ச்சில் உட்கார வைப்பது மிகக்கடினமான முடிவுதான். ஆனால் மிடில் ஆர்டரில் பந்துவீசத் தெரிந்த பேட்ஸ்மேன் ஒருவர் தேவை என்பதால் ஷ்ரேயாஸ் ஐயரை ஆடவைக்க முடியாமல் போயிற்று. டி20 உலக கோப்பைக்கான அணியில் பந்துவீசவல்ல பேட்ஸ்மேன் ஒருவர் தேவை என்பதை ஷ்ரேயாஸ் ஐயரிடமே தெளிவாக கூறிவிட்டோம். அனைவரும் ப்ரொஃபஷனல் கிரிக்கெட்டர்கள் என்பதால், அணியின் தேவையை புரிந்துகொள்வார்கள் என்றார் கேப்டன் ரோஹித்.
