இந்தியா - நியூசிலாந்து இடையே வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

இந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலுமே இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் வெறும் 165 ரன்கள் மட்டுமே அடித்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2 இன்னிங்ஸ்களிலும் மயன்க் அகர்வால் மட்டுமே சிறப்பாக ஆடினார். ரஹானே ஓரளவிற்கு ஆடினார். இவர்களை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. 

இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சீனியர் மற்றும் நட்சத்திர வீரர்களான கோலி, புஜாரா கூட சரியாக ஆடவில்லை. இருவருமே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 2 இன்னிங்ஸ்களிலும் ஏமாற்றமளித்தார். ரிஷப் பண்ட், ஹனுமா விஹாரி ஆகியோரும் பேட்டிங்கில் சொதப்பினர். 

முதல் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங் தான் முக்கியமான காரணம். இந்நிலையில், இந்த தோல்வி குறித்தும் அடுத்த போட்டியை அணுகவேண்டிய முறை குறித்தும் கேப்டன் கோலி பேசியுள்ளார்.

“டாஸ் தான் ஆட்டத்தின் பெரிய திருப்பமாக அமைந்துவிட்டது. முதலில் பேட்டிங் ஆடியது சவாலாக இருந்தது. ஆனால் ஒரு பேட்டிங் யூனிட்டாக, நாங்கள் எதிரணிக்கு சவாலளிக்கவில்லை. நியுசிலாந்து பவுலர்களை முதல் இன்னிங்ஸில் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளாக்கவில்லை. 220-230 ரன்களாவது அடித்திருக்க வேண்டும். 165 ரன்கள் என்ற மோசமான ஸ்கோரை அடித்தபோதே, நாங்கள் போட்டியில் இருந்து அந்நியப்பட்டுவிட்டோம். முதல் இன்னிங்ஸிலேயே பெரும் பின்னடைவை சந்தித்துவிட்டோம். அதிலிருந்து மீண்டெழுவது கடினமாகிவிட்டது. 

Also Read - அவரு வேலைக்கு ஆகமாட்டாரு.. அவர தூக்கிட்டு இவர சேருங்க.. ஜாம்பவனையே தூக்கிப்போட வலியுறுத்தும் முன்னாள் வீரர்

எங்களது(இந்திய அணியின்) வெற்றிக்கான காரணம் என்னவோ, அதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதை உணர்ந்துவிட்டோம். எந்த நாட்டில் ஆடுகிறோம், ஆடுகளத்தின் தன்மை என்ன போன்ற விஷயங்களில் பெரியளவில் கவனம் செலுத்தாமல், இதுவரை நாம் எப்படி ஆடி வெற்றி பெற்றிருக்கிறோமோ அதேபோல் ஆட வேண்டும். அப்படி பார்க்கப்போனால், அதிகமான ரன்களை குவித்துதான் நாங்கள் ஜெயித்திருக்கிறோம். எனவே ஒரு பேட்டிங் யூனிட்டாக அடுத்த போட்டியில் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும்” என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.