இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகள் முடிந்த நிலையில், இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. 

இந்த இரண்டு போட்டிகளிலும் ஆடிய வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு கவனம் ஈர்த்துள்ளனர். குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தினார். 

தவான் முதல் போட்டியில் சரியாக ஆடவில்லை. ஆனால் இரண்டாவது போட்டியில் ஓரளவிற்கு ஆடினார். ரிஷப் பண்ட் மற்றும் மனீஷ் பாண்டே ஆகிய இருவரும் இரண்டு போட்டிகளிலுமே சரியாக ஆடவில்லை. இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால் கடைசி போட்டியில் ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்பதை கோலி உறுதி செய்துள்ளார். 

இதுகுறித்து பேசிய கேப்டன் கோலி, தொடரை ஜெயிப்பதுதான் முக்கியம் என்பதால் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். முதல் 2 போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றிவிட்டதால், கடைசி போட்டியில் சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும் என்று கோலி தெரிவித்தார். 

இதன்மூலம் கடைசி போட்டிக்கான அணியில் மாற்றங்கள் செய்யப்படும் என்பதை கோலி உறுதி செய்துவிட்டார். ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் சாஹர், தீபக் சாஹர் ஆகிய மூவருக்கும் கடைசி போட்டியில் வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.