பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் டாம் பிளண்டல் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் ரோ ஸ் டெய்லர் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்து, 3வது விக்கெட்டுக்கு 120 ரன்களை சேர்த்தனர். டெய்லர் 70 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் கேன் வில்லியம்சன் சதமடித்தார். 129 ரன்களுக்கு வில்லியம்சன் ஆட்டமிழக்க, அதன்பின்னர் நிகோல்ஸும் வாட்லிங்கும் சிறப்பாக ஆடினர்.

நிகோல்ஸ் மற்றும் வாட்லிங் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். நிகோல்ஸ் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வாட்லிங் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். வில்லியம்சன், டெய்லர், நிகோல்ஸ் மற்றும் வாட்லிங்கின் சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் நியூசி., அணி 431 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஷான் மசூத் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அபித் அலியும் முகமது அப்பாஸும் களத்தில் நிற்க, 2ம் நாள் ஆட்டம் முடிந்தது. 2ம் நாள் ஆட்ட முடிவில் பாக்., அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் அடித்துள்ளது.