IPL 2023: கேமரூன் க்ரீன் அபார அரைசதம்.. திலக் வர்மா அதிரடி கேமியோ..! SRH-க்கு கடின இலக்கை நிர்ணயித்த MI
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, கேமரூன் க்ரீனின் அதிரடியான அரைசதம் மற்றும் திலக் வர்மாவின் அதிரடியான கேமியோவால் 20 ஓவரில் 192 ரன்களை குவித்து, 193 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி இன்று ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் ஐடன் மார்க்ரம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
மயன்க் அகர்வால், ஹாரி ப்ரூக், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், அபிஷேக் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், மயன்க் மார்கண்டே, டி.நடராஜன்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் க்ரீன், அர்ஜுன் டெண்டுல்கர், நெஹல் வதேரா, ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.
முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா 28 ரன்களும், இஷான் கிஷன் 38 ரன்களும் அடித்தனர்.
சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த நிலையில், கேமரூன் க்ரீன் பொறுப்புடன் நிலைத்து நின்று அதேவேளையில் அடித்தும் ஆடி அரைசதம் அடித்தார். அவருடன் இணைந்து அதிரடியாக ஆடிய திலக் வர்மா 17 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 40 பந்தில் 64 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுக்க, 20 ஓவரில் 192 ரன்களை குவித்து, 193 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது.